மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி திணிப்பை கைவிட வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி திணிப்பை கைவிட வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 May 2022 12:23 AM IST (Updated: 9 May 2022 12:23 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

மத்திய அரசு அலுவலகங்களில் இனி அனைத்து பதிவேடுகளும் இந்தியில் மட்டும் தான் பராமரிக்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதுவும் ஒரு வகையான இந்தித் திணிப்பு தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இத்தகைய செயல்களை அனுமதிக்க முடியாது.

புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குனர் ஏப்ரல் 29-ம் தேதியிட்ட சுற்றறிக்கையில், எதிர்காலத்தில் அனைத்து வகையான பதிவேடுகள், பணி புத்தகங்கள், பணி கணக்குகளின் குறிப்புகளும் முடிந்தவரை இந்தியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருக்கிறது.

அப்பட்டமான இந்தி திணிப்பு

அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் அனைத்து பதிவேடுகளும் இனி இந்தியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது அப்பட்டமான இந்தித் திணிப்பு என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

இந்தியைத் தவிர வேறு எந்த மொழியையும் மத்திய அரசு அலுவலகங்களில் அனுமதிக்க முடியாது என்பது தான் இதன் பொருள் ஆகும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு மட்டுமின்றி, இந்திய அலுவல் மொழி சட்டத் திருத்தத்திற்கும் எதிரான செயல் ஆகும். இந்தி பேசாத மாநில மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும். இதை அரசு தவிர்க்க வேண்டும்.

‘ஜிப்மர்’ உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் இனிவரும் காலங்களில் அனைத்து பதிவேடுகளும் இந்தி மொழியில் மட்டும் தான் பராமரிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்பப்பெறப்பட வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் இப்போதுள்ள நிலையே தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story