தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் செல்ல தடை நீங்கியது
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் செல்வதற்கான தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது. இதனையடுத்து விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மயிலாடுதுறை,
தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறுவது வழக்கம். ஆதீன குரு முதல்வர் குரு பூஜையை முன்னிட்டு இந்த விழா நடக்கிறது. விழாவின்போது தருமபுரம் ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் அமர வைத்து, மடத்தை சுற்றி 4 வீதிகளிலும் அவரை தங்கள் தோளில் தூக்கி செல்வார்கள். அப்போது பக்தர்களுக்கு ஆதீனம் ஆசி வழங்குவார்.
500 ஆண்டுகாலமாக இந்த விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பட்டின பிரவேச விழா நடைபெற உள்ளது.
பல்லக்கில் தூக்கி செல்ல தடை
இதற்கிடையே மனிதனை, மனிதன் பல்லக்கில் தூக்கிச்செல்வதற்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. விழாவில் ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதித்து கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த விழாவுக்கு தடை விதிப்பதா? என்று எதிர்ப்புகுரல் கிளம்பியது.
இந்த தடையை நீக்கும்படி பக்தர்களும், ஆதீனங்களும் அரசை வலியுறுத்தினர். மதுரை ஆதீனமும் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தடையை நீக்க வலியுறுத்தின.
கவன ஈர்ப்பு தீர்மானம்
சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பட்டின பிரவேச விழாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தினார். சட்டசபை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, சட்டசபை பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டரும் இந்த தடையை நீக்க வலியுறுத்தி வந்தனர்.
அப்போது பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ‘இந்த விஷயத்தில் நடுநிலையோடு துலாபாரம் போல் நின்று முதல்-அமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார்’ என்று தெரிவித்தார்.
முதல்-அமைச்சருடன் சந்திப்பு
இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞானபாலயசுவாமி, கோவை போரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து பேசினர்.
பட்டினபிரவேச தடை குறித்து ஆலோசித்ததாகவும், முதல்-அமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புவதாகவும் ஆதீனங்கள் தெரிவித்தனர்.
தடை நீக்கம்
இந்தநிலையில் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தின் பட்டின பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி நேற்று மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், “மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 2022-ம் ஆண்டிற்கான பட்டின பிரவேச விழாவில் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச்செல்வதற்கு அனுமதி மறுத்து விதிக்கப்பட்ட தடையாணை விலக்கிக்கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நகலை தருமபுரம் ஆதீனத்துக்கு உதவி கலெக்டர் அனுப்பி வைத்தார். மேலும் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கும் இந்த உத்தரவு நகல் அனுப்பி வைக்கப்பட்டது.
தருமபுரம் ஆதீனம் பேட்டி
இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான உக்தவேதீஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டைமண்டல ஆதீனம் திருச்சிற்றம்பல தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாவது:-
வாழ்த்து
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் முதல்-அமைச்சரை சந்தித்தபோது பட்டின பிரவேச விழாவை வழக்கம்போல் நடத்த வாய்மொழியாக அனுமதி அளித்து இருந்தார். இந்த விழாவை தொடர்ந்து நடத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முயற்சித்திருக்கிறார். அவருக்கும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் அனைத்து நலன்களும் கிடைக்க வாழ்த்துகிறோம்.
நல்லாட்சி புரியட்டும்
மரபுவழியாக நடைபெறும் இதுபோன்ற சம்பிரதாயங்களில் இருந்து அரசு என்றுமே மாறுபட்டதில்லை என்பதை இதன் மூலமாக நிரூபித்து காட்டி இருக்கிறார்கள். தமிழ் வழியிலேயே இருந்து அவர்களுடைய முன்னோர்கள் எந்த அளவுக்கு ஆட்சி நடத்தினார்களோ, அதே வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். அவர் தொடர்ந்து நல்லாட்சி நடத்த இறைவன் அருள் புரியட்டும்.
ஆன்மிக மறுப்பாளர்கள் தங்களுடைய கொள்கையில் உறுதியாக இருப்பதுபோல் நாங்கள் எங்களுடைய கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறோம்.
சொந்த விருப்பம்
மனிதாபிமான அடிப்படையில் பல்லக்கை தோளில் சுமப்பது விமர்சிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் அவரவர் சொந்த விருப்பத்தின் பேரிலேயே பல்லக்கை சுமக்கின்றனர்.
இறைவன் கொடுத்த அருளால் கிடைப்பது இந்த பல்லக்கு. இதை சிலர் எளிமையாக நினைக்கின்றனர். தவம் உடையவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும் என அபிராமிபட்டர் கூறி உள்ளார். பட்டின பிரவேச விழாவை முந்தைய ஆதீனங்கள் நிறுத்தாமல் செய்ததை நாங்கள் தொன்றுதொட்டு தற்போதும் செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பட்டின பிரவேச விழாவுக்கான தடை நீங்கியதையடுத்து விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Related Tags :
Next Story