குமரியில் பெண்ணின் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடிய திருடர்கள் கேரளாவில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு...!


குமரியில் பெண்ணின் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடிய திருடர்கள் கேரளாவில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு...!
x
தினத்தந்தி 9 May 2022 6:22 AM GMT (Updated: 2022-05-09T11:52:53+05:30)

குமரியில் பெண்ணின் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடிய திருடர்கள் கேரளாவில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பிலாங்காலவிளையை சேர்ந்தவர் ஆஸ்டிக்கான் ஜோஸ்லின். இவருடைய மனைவி நட்சத்திர பிரோமிகா (வயது 35), என்ஜினீயர்.

சம்பவத்தன்று வேலை முடிந்து தக்கலை வழியாக வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். சாமிவிளை பகுதியை சென்றடைந்த போது பின்னால் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தபடி இருந்துள்ளனர்.

நகை பறிப்பு

இந்தநிலையில் மர்மநபர்கள் திடீரென  பிரோமிகாவின் கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்து தாக்கியதாக தெரிகிறது. இதனை சற்றும் எதிர்பாராத பிரோமிகா நிலைதடுமாறி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். மேலும் திருடன், திருடன் என சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
 
ஆனால் அதற்குள் அந்த நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதற்கிடையே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்ததில்  பிரோமிகாவுக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

மேலும் இந்த சம்பவம் குறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை  தேடி வந்தனர்.

இந்நிலையில் கேரளமாநிலம் திருவனந்தபும் மருமாமூடு பகுதியில்  மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் சாலையில் உள்ள டிவேடரில்  மோதி  விபத்துகுள்ளாகியுள்ளனர். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார்  சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவரை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகவும், காயம் அடைந்தவரை சிகிச்சைக்காவும் அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையின் போது , அவரது பாக்கெட்டிலிருந்து அறுந்த நிலையில் 11  சவரன் தங்க சங்கிலி இருப்பதை பார்த்த போலீசார் காயமடைந்தவரிடம்  விசாரித்த போது இறந்தவர் திருவந்தபுரம் கடினங்குளம் பகுதியை சேர்ந்த சஜாதுஹான்(வயது 17 )என்பதும், காயமடைந்தவர் கோட்டையம் ராமபுரம் பகுதியை சார்ந்த அமல்( 21) இவர்கள்  என்பதும் குமரிமாவட்டதில்  நேற்று அதிகாலை  பிரேமா என்ற பெண்ணிடம்  செயின் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இது குறித்து கேரள போலீசார் குமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் அவனிடம் நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனங்களில் நண்பர்களுடன் இணைந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயின் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

விபத்தில் இறந்த சஜாதுஹான் கடந்த மூன்று தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் சிறையில் இருந்து வெளியே வந்ததும், இவர்களில் யார் போலீசில் சிக்கினாலும் திருட்டு நகைகள் மூலமாக கிடைக்கும் பணத்தை கொண்டு  அவர்களை ஜாமீனில் எடுப்பதும் தெரியவந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இந்த கும்பலை குமரி  மாவட்ட போலீசார் இரண்டு தனிப்படை அமைத்து தேடிவந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story