ஜிப்மரை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம்


ஜிப்மரை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 9 May 2022 10:05 PM IST (Updated: 9 May 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜிப்மரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 4 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜிப்மரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 4 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜிப்மர் ஆஸ்பத்திரி
புதுவை கோரிமேட்டில் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் ஆஸ்பத்திரியின் இயக்குனராக டாக்டர் ராகேஷ் அகர்வால் உள்ளார். சமீபத்தில் இவர் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஜிப்மரில் பயன்படுத்தப்படும் பதிவுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குகள் என எல்லாவற்றிலும் தலைப்புகள், பணிக்கால கணக்குகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதவேண்டும். எதிர்காலத்தில் பதிவேடுகள் சேவை புத்தகங்கள், கணக்குகள் அனைத்தும் முடிந்தவரை இந்தியில் மட்டுமே எழுத வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
முற்றுகை போராட்டம்
இயக்குனரின் இந்த சுற்றறிக்கை தமிழகம்-புதுவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழை புறக்கணித்து இந்தியை திணிக்க முயற்சி நடப்பதாக அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
ஜிப்மர் இயக்குனரின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஜிப்மரை முற்றுகையிடப்போவதாக புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. அறிவிப்பு வெளியிட்டார். 
தள்ளுமுள்ளு
இதற்காக தி.மு.க.வினர் இன்று காலை ஜிப்மர் எதிரே ஒன்று கூடினார்கள். அங்கிருந்து மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அங்கிருந்து ஜிப்மர் மெயின்கேட் நோக்கி அவர்கள் சென்றபோது, போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினார்கள். அதை தள்ளிக்கொண்டு தி.மு.க.வினர் செல்ல முயன்றால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். அப்போது எம்.எல்.ஏ.க்களான சிவா, அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் தி.மு.க. துணை அமைப்பாளர்கள் ஏ.கே.குமார், செந்தில்குமரன், சண்.குமாரவேல், கலியபெருமாள், குணா திலீபன், சுந்தரி அல்லிமுத்து, அமுதாகுமார், பொருளாளர் லோகையன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், ஜே.வி.எஸ்.சரவணன், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், சக்திவேல், அருள்செல்வி, பழனி உள்பட சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான அனைவரும் போலீஸ் வேனில் ஏற்றிச்செல்லப்பட்டு கோரிமேடு போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
போராட்டத்தின்போது தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
ரங்கசாமி கருத்து என்ன?
ஜிப்மர் ஆஸ்பத்திரி மூலம் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏழை மக்கள் பயனடைந்து வந்தனர். தற்போது இந்த ஆஸ்பத்திரி ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் சீரழிந்துகொண்டிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவரை இயக்குனராக நியமித்ததால் அவர் இந்த மக்களுடைய மனநிலையையும், தமிழ் உணர்வையும் கொச்சைப்படுத்தும் வகையில் இந்தியை திணிக்கக்கூடிய ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல் முளையிலேயே கிள்ளி எறியவேண்டியது. பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடப்பதால் முதல்-அமைச்சர் ரங்கசாமி இதுதொடர்பாக வாய் திறக்காமல் உள்ளார். அவர் தனது கருத்தை சொல்ல வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கால பணியிடம்
இயக்குனராக ராகேஷ் அகர்வால் வந்தபிறகு ஆஸ்பத்திரிக்கு தேவையான மருந்துகள் வாங்கப்படவில்லை. பிரசவத்துக்கு வருபவர்களிடம் கூட கையுறை வாங்கி வருமாறு வற்புறுத்துகிறார்கள். 800 பணியிடங்கள் காலியாக உள்ளது. அந்த பணிகளுக்கு தனியார் மூலம் ஆட்களை வைத்து கையூட்டு பெற்றுள்ளனர்.
தற்போது நேரடி நியமனம் மூலம் 44 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லை.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story