புதுச்சேரி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு
மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் அமைச்சர் லட்சுமிநாராயணன் வலியுறுத்தினார்.
மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் அமைச்சர் லட்சுமிநாராயணன் வலியுறுத்தினார்.
மத்திய அரசு பாராட்டு
குஜராத் மாநிலத்தில் நடந்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல சபையின் நல்வாழ்வு ஆலோசனை மாநாட்டில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்துகொண்டார். மாநாட்டில் அவர் புதுவை யூனியன் பிரதேசத்தில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை எடுத்துரைத்தார்.
அதாவது, புதுவை யூனியன் பிரதேசத்தில் 2021-22ம் நிதியாண்டில் 44 சுகாதார வசதிகளை சுகாதார மற்றும் நல மையங்களாக மாற்ற இலக்கை நிர்ணயித்தது. ஆனால் புதுச்சேரியில் 126 மையங்களையும், சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களாக மாற்றியுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஓராண்டில் ஒரு லட்சத்து 29 ஆயிரம் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களுக்கும் கண்காணிப்பு வலையமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறித்து தெரிவித்தார். இத்தகைய திட்டங்களை மத்திய அரசு பாராட்டியது.
10 சதவீத இடஒதுக்கீடு
மாநாடு முடிந்ததும் அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் சுகாதாரத்துறை செயலாளர், இயக்குனர் ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மண்டவியாவை சந்தித்து பேசினார்கள். அப்போது புதுவையில் அனைவருக்கும் சுகாதார திட்டத்தை விரிவுபடுத்த 100 சதவீத நிதியுதவி வழங்கவேண்டும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும், அரசு மருத்துவமனைகளில் உள்ளூர் மருத்துவர்களை நியமிக்க அதிகாரம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இதுதொடர்பான கோப்புகளை தயாரித்து உள்துறைக்கும், சுகாதாரத்துறைக்கும் அனுப்புமாறு மத்திய மந்திரியிடம் அமைச்சர் லட்சுமிநாராயணன் கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story