சட்ட விதிகளை மீறி பேனர்கள் அச்சிட்டால் உரிமம் ரத்து
சட்ட விதிமுறைகளை மீறி பேனர் அச்சிட்டால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் வல்லவன் எச்சரித்துள்ளார்.
சட்ட விதிமுறைகளை மீறி பேனர் அச்சிட்டால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் வல்லவன் எச்சரித்துள்ளார்.
கலெக்டர் ஆலோசனை
புதுவையின் முக்கிய இடங்களில் அனுமதியின்றி கட்-அவுட், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் அவற்றை அகற்ற உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு பேனர்களை அகற்றிவிட்டு அதற்கான செலவை பேனர் வைத்தவர்களிடமே வசூலிக்க உத்தரவிட்டது.
இந்தநிலையில் அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கட்-அவுட்டுகளை அகற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் வல்லவன் தலைமையில் நடந்தது.
இதில் போலீஸ், உள்ளாட்சி, பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு கட்-அவுட், பேனர்களை அகற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இதுதொடர்பாக கலெக்டர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தண்டனைக்குரிய குற்றம்
புதுச்சேரியில் பொதுஇடங்களில் பேனர்கள், கட்-அவுட்டுகள் மற்றும் கொடிகள் கட்டுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐகோர்ட்டு உத்தரவுப்படி இத்தகைய செயல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே அனுமதியின்றி பொது இடங்களில் பேனர்கள், கட்-அவுட்டுகள் மற்றும் கொடிகள் வைத்திருந்தால் தாமாக முன்வந்து 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்.
அவ்வாறு செய்ய தவறினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் பேனர்களை அகற்றாததற்காக அபராதம் வசூலிக்கப்படும்.
உரிமம் ரத்து
பேனர்கள், கட்-அவுட்டுகள் மற்றும் கொடிகள் அகற்றுவதற்காக சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சட்ட விதிமுறைகளை மீறும் பேனர் அச்சிட்டால் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.
அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கட்-அவுட்டுகள் மற்றும் கொடிகளை போலீஸ், உள்ளாட்சி, பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து அகற்றுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story