அத்திவரதர் தரிசன நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. அரசு முறையாக பாதுகாப்பு அளித்தது


அத்திவரதர் தரிசன நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. அரசு முறையாக பாதுகாப்பு அளித்தது
x
தினத்தந்தி 10 May 2022 3:48 AM IST (Updated: 10 May 2022 3:48 AM IST)
t-max-icont-min-icon

அத்திவரதர் தரிசன நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. அரசு முறையாக பாதுகாப்பு அளித்தது என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது நடந்த விவாதம் வருமாறு:-

எடப்பாடி பழனிசாமி:- 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவது வழக்கம். அ.தி.மு.க. ஆட்சியில் காஞ்சீபுரத்தில் அத்திவரதர் 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்புரிந்தார். 1.07 கோடி பேர் அவரை தரிசித்து சென்றார்கள். அந்த நிகழ்ச்சியிலே முழு பாதுகாப்பு, உணவு, குடிநீர், மருத்து வசதிகள் அளிக்கப்பட்டன. அதில் தனியார்களுடைய பங்களிப்பும் பெருமளவில் இருந்தது.

அமைச்சர் துரைமுருகன்:- அத்திவரதருக்கு ஒரு பாதுகாப்பு போட்டதை நான் பாராட்டுகிறேன். ஆனால், அதே திறமை, அதே போலீஸ் ஏன் கும்பகோணம் மகாமகத்திலே கோட்டை விட்டது?

முதல்-அமைச்சர் குடும்பம்

எடப்பாடி பழனிசாமி:- நீங்கள் 30 வருடங்களுக்கு முன்பு நடந்ததை பேசாதீர்கள். இப்போது நடப்பதை பேசுங்கள். இந்த சபையை கலகலப்பாக்க அமைச்சர் அதை சொல்லுகிறார். மேலும் எங்களை திசை திருப்புகிறார்.

சபாநாயகர் அப்பாவு:- திசைதிருப்பினாலும் கையில் ஆயுதம் (குறிப்புகள் அடங்கிய தாள்) வைத்திருக்கிறீர்கள்.

எடப்பாடி பழனிசாமி:- எதையும் பார்க்காமல்தான் பேசுகிறேன். சரியாக பேச வேண்டும் என்பதற்காக அதை வைத்திருக்கிறேன். அத்திவரதர் தரிசனத்திற்கு இங்கு இருக்கிற அமைச்சர்கள்கூட வந்தார்கள். நானும் சென்றேன்.

சபாநாயகர் அப்பாவு:- ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதன் அடிப்படையில் அத்திவரதரை அவர்கள் சென்று கும்பிட்டிருப்பார்கள்.

எடப்பாடி பழனிசாமி:- அன்றைய எதிர்க்கட்சித்தலைவராக இருந்த முதல்-அமைச்சரின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் அங்கு வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார்கள். இறைவன் எல்லோருக்கும் பொதுவானவர்.

முறையாக பாதுகாப்பு

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அங்கு ஏற்பட்ட நெரிசலிலே பலர் சிக்கி இறந்ததாகச் சொன்னார். அப்படி அல்ல. அங்கு வயதானவர்கள், உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்கள் வந்தார்கள். அதனால்தான் இறப்பு நேரிட்டதே தவிர நெரிசலிலே சிக்கி இறப்பு ஏற்படவில்லை.

பல பேர் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தார்கள். அப்படி வழக்கு தொடர்கிறபோது, என்னென்ன காரணத்திற்காக இறந்தார்கள் என்று கோர்ட்டிலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதை மறைக்க முடியாது. அந்த வகையில் அத்திவரதர் தரிசனத்திற்கு முறையாக பாதுகாப்பை அ.தி.மு.க. அரசு சிறப்பாக அளித்தது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story