தொடர்ந்து குறைந்து வரும் தொற்று: தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா


தொடர்ந்து குறைந்து வரும் தொற்று: தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 May 2022 11:19 PM GMT (Updated: 9 May 2022 11:19 PM GMT)

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருகிறது. அந்தவகையில் நேற்று 38 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருகின்றது. அந்தவகையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நேற்று புதிதாக 13 ஆயிரத்து 678 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 25 பேரும், பெண்கள் 13 பேரும் உள்பட 38 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 20 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும் உள்பட 10 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 28 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 5 பேர், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 7 பேர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 17 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளன. இந்த மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்றும் இல்லை, சிகிச்சையிலும் யாரும் இல்லை.

62 பேர் ‘டிஸ்சார்ஜ்’

தமிழகத்தில் தொடர்ந்து 53-வது நாளாக நேற்று கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி 454 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 240 பேரும், செங்கல்பட்டில் 125 பேரும் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் 29 பேர் மட்டுமே ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

62 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 15 ஆயிரத்து 912 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story