ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறக்கலாம் தமிழக அரசுக்கு, வேளாண் வல்லுனர் குழு பரிந்துரை


ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறக்கலாம் தமிழக அரசுக்கு, வேளாண் வல்லுனர் குழு பரிந்துரை
x
தினத்தந்தி 10 May 2022 5:40 AM IST (Updated: 10 May 2022 5:40 AM IST)
t-max-icont-min-icon

டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்கலாம் என்று தமிழக அரசுக்கு, வேளாண் வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளது.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்ட வேளாண் வல்லுனர் குழு சார்பில், மேட்டூர் அணை பாசன பகுதியில் பயிர் சாகுபடியும், நீர் வழங்கல் திட்டமும் என்ற தலைப்பில் தமிழக அரசுக்கு பரிந்துரைகளை அனுப்பி உள்ளது.

இது குறித்து வல்லுனர் குழுவை சேர்ந்த கலைவாணன் கூறியதாவது:-

நடப்பு ஆண்டு மேட்டூர் அணை பாசன பகுதிக்கு பாசனத்திற்காக இயல்பாக திறக்க வேண்டிய ஜூன் 12-ந்தேதி அணைைய திறக்கலாம் என தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி மேட்டூர் அணைக்கு வர வேண்டிய நீரை உறுதியாக பெற்றுத்தர வேண்டும்.

அணை திறப்புக்கு முன்னதாக அனைத்து ஆறு, வாய்க்கால், நீர்நிலைகளை தூர்வாரி பாசனத்திறனை உயர்த்திட, போதிய நிதி அளித்து செயல்படுத்த வேண்டும். விவசாயிகள் முன்னேற்பாடு செய்திட வசதியாக நீர் திறப்பை 15 நாட்களுக்கு முன்பும், மூடும் காலத்தை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டு அணை மூடும் நாளை நீட்டிக்கக் கூடாது.

அணையின் நீர் தேவையை குறைத்திட நிலத்தடி நீர் உள்ள இடங்களில் குறுவை பருவத்தில் நாற்றுவிட்டு நடவு பணிகளை முடிக்க அறிவுரை வழங்க வேண்டும். மே, ஜூன் மாதங்களில் தடையின்றி மும்முனை மின்சாரம் அளிக்க வேண்டும். குறுவை, சம்பா பருவங்களில் அதிக அளவில் நேரடி நெல் விதைப்பு செய்திட விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

குறுகிய கால ரகங்களை மே முதல் ஜூன் முடியவும், நீண்ட கால ரகங்களை ஆகஸ்டு 15-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரையும், மத்திய கால ரகங்களை செப்டம்பர் மாதம் முழுவதும் விதைக்க வேண்டும்.

இந்த காலத்திற்குள் விதைக்காமல் காலம் தாழ்த்தி விதைப்பவர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய இயலாது. அரசு இழப்பீடு வழங்க இயலாது. எனவே முன்கூட்டியே அறிவிப்பு செய்தால் விவசாயிகள் காலத்தே உழவு பணிகளை மேற்கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story