“ஆதீன மடங்களின் சம்பிரதாயங்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்”- மதுரை ஆதீனம் பேட்டி


“ஆதீன மடங்களின் சம்பிரதாயங்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்”- மதுரை ஆதீனம் பேட்டி
x
தினத்தந்தி 10 May 2022 9:22 AM IST (Updated: 10 May 2022 9:22 AM IST)
t-max-icont-min-icon

தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், ஆதீன மடங்களின் சம்பிரதாயங்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் எனவும் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் தெரிவித்தார்.

மதுரை,

தருமபுர ஆதீன மடத்தில் பட்டின பிரவேச நிகழ்வுக்கு விதித்த தடையை நீக்கி தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. இதை வரவேற்று மதுரை ஆதீன மடம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

பட்டினப்பிரவேசம் என்பது நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வரும் மங்கள நிகழ்வு ஆகும். அதற்கு தமிழக அரசு நீண்ட போராட்டத்துக்கு பிறகு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழகத்தில் அனைத்து மதத்தினருக்கும் சமய சம்பிரதாய கடமைகள் உள்ளன. ஆதீன மடங்களின் சமய, சம்பிரதாயங்களை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அனைத்து மதத்தினரையும் தமிழக முதல்-அமைச்சர் அரவணைத்து செல்ல வேண்டும். 

பட்டின பிரவேசம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த நிலையில், அதை சர்ச்சையாக்கி இப்போது உலகறியச் செய்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விஷயத்தில், நடந்தது நடந்து விட்டது. இனி நடப்பது நல்லதாக அமைய வேண்டும். தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசத்துக்கு ஜீயர்களும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். சைவம், வைணவம் பேதமின்றி அனைவரும் எங்களுக்கு ஆதரவாக நின்றது மகிழ்ச்சி தருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story