வேலூர் ஷவர்மா விற்பனை கடைகளில் 4 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்..!


வேலூர் ஷவர்மா விற்பனை கடைகளில் 4 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்..!
x
தினத்தந்தி 10 May 2022 12:50 PM IST (Updated: 10 May 2022 12:50 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் உள்ள ஷவர்மா விற்பனை கடைகளில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் 4 கிலோ கெட்டுபோன ஷவர்மா கண்டறியப்பட்டது.

வேலூர்:

கேரளாவில் ‘சிக்கன் ஷவர்மா’ சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். அவர் சாப்பிட்ட உணவை அம்மாநில சுகாதாரத் துறையினர் பரிசோதித்ததில் ‘ஷிகெல்லா’ என்ற பாக்டீரியா இருந்ததும், அப்பெண் உயிரிழப்புக்கு அந்த பாக்டீரியா காரணமாக இருக்கலாம் என்றும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுபோல் கன்னியாகுமரி, தருமபுரி, தஞ்சாவூர், ஒரத்தநாடு பகுதிகளில் ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் ஷவர்மா விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வேலூர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஷவர்மா விற்பனை கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

வேலூர் மாநகர் 21 இடங்களிலும் மாவட்டம் முழுவதும் மொத்தம் 40 இடங்களில் ஷவர்மா கடைகள் உள்ளன. அனைத்து கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.

இதில் 6 கடைகளில் சுகாதாரமற்ற நிலையில் தயாரிப்பு கூடங்கள் இருந்தன. அந்த விற்பனை நிலையங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோல 4 கிலோ கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஷவர்மா உணவகங்களில் நன்றாக வேக வைத்த பிறகு வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய வேண்டும். அவசர அவசரமாக பாதி சிக்கன் வெந்த நிலையில் கொடுக்கும் போது அவை விஷமாக மாறிவிடும். 

குழந்தைகள் முதியவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். நன்றாக வேக வைத்த ஷவர்மா மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story