வாஷிங்மெஷினில் சாவியை வைத்து விட்டு சென்ற குடும்பம் - நோட்டமிட்டு இளம்பெண் கைவரிசை..!


வாஷிங்மெஷினில் சாவியை வைத்து விட்டு சென்ற குடும்பம் - நோட்டமிட்டு இளம்பெண் கைவரிசை..!
x
தினத்தந்தி 10 May 2022 10:08 AM GMT (Updated: 2022-05-10T15:38:41+05:30)

கோவை அருகே குடும்பத்தினர் துக்க வீட்டுக்கு சென்ற நிலையில் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை:

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் காட்டம்பட்டியைச் சேர்ந்தவர் கிரிகதிர்வேல் (வயது 54). இவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு துக்க நிகழ்ச்சிக்காக நேற்று வெளியே சென்று உள்ளனர்.

பின்னர்  மாலை வீடு திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகை பணம் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து, கிரிகதிர்வேல்  போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீட்டின் கதவு உடைக்கப்படாமல் பீரோவில் இருந்த பணம் திருடு போனது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அருகில் உள்ள கோழிப் பண்ணையில் பணியாற்றி வந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ரேவதி (வயது 32) என்பவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது அவரது வீட்டில் இருந்து  14 சவரன் நகை மற்றும் 4 ஆயிரத்து 500 ரூபாய் பணம்  மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கிரிகதிர்வேல் குடும்பத்துடன் வெளியே சென்றதைப் நோட்டமிட்டு வீட்டின் முன்பு இருந்த வாஷிங் மெஷினில் வைத்து இருந்த சாவியை எடுத்து, கதவைத் திறந்து பீரோவில் இருந்த பணம் மற்றும் 14 சவரன் நகையை திருடியது தெரியவந்தது. 

பின்னர், போலீசார் ரேவதியை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story