அரசு பணிக்கான வயது வரம்பினை தளர்த்த வேண்டும்


அரசு பணிக்கான வயது வரம்பினை தளர்த்த வேண்டும்
x
தினத்தந்தி 10 May 2022 10:18 PM IST (Updated: 10 May 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

அரசு பணிகளுக்கான வயது வரம்பினை தளர்த்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.

அரசு பணிகளுக்கான வயது வரம்பினை தளர்த்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.
அரசு பணியிடங்கள்
புதுவை அரசுத்துறைகளில் சுமார் 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே அரசுத்துறைகளில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக பணியிடங்கள் நிரப்பப்படாததால் 30 வயதை கடந்த இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பு பெறுவது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பு கிடைக்காதோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை
அவர்கள் இதுதொடர்பாக தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து அரசு வேலைவாய்ப்புக்கான வயது வரம்பில் தளர்வு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதை அரசிடம் வலியுறுத்த எம்.எல்.ஏ.க்களும் முடிவு செய்தனர்.
இந்தநிலையில் புதுவை சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நேற்று எம்.எல்.ஏ.க்கள் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நேரு, வைத்தியநாதன், நாக.தியாகராஜன், பிரகாஷ்குமார், கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், சிவசங்கர், ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் அவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
இளைஞர்கள் வேதனை
புதுவை மாநிலத்தில் கடந்த பல வருடங்களாக அரசுத்துறையில் காலியான பணியிடத்துக்கு உண்டான பணியாளர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதால் அரசுத்துறைகளில் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு துறைகளிலும் பல கோப்புகள் தேக்கம் அடைந்து வருகிறது.
தற்போது காவல்துறை பணிக்கு தேர்வு நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் மற்ற துறைகளுக்கும் பணியாளர்கள் தேர்வுக்காக புதுவை மாநிலத்தில் உள்ள 30 தொகுதிக்குட்பட்ட பட்டதாரி இளைஞர்கள் பலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் 35 வயதையொட்டி உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கான கனவு வேதனை அளிக்கும் நிலையில் உள்ளது.
40 வயது வரை...
கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக புதுச்சேரியில் எந்த அரசு பணிக்கான தேர்வுகளையும் நடத்தாததால் பட்டதாரி இளைஞர்கள் தற்போது 35 வயதை கடக்கும் நிலையில் உள்ளனர். இந்த இளைஞர்களுக்கு அவர்கள் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காததால் வருவாய் ஈட்ட முடியாமல் கஷ்டத்திலும், துயரத்திலும் உள்ளனர். இப்படிப்பட்ட இளைஞர்களின் எதிர்கால நிலைமைகளை கருத்தில்கொண்டு அரசு பணிக்கான காலியிடங்களை நிரப்ப வயது வரம்பை 40 ஆக தளர்த்த ஆவன செய்யவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story