ஆந்திரா-ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் ‘அசானி' தீவிர புயல்


ஆந்திரா-ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் ‘அசானி தீவிர புயல்
x
தினத்தந்தி 11 May 2022 5:18 AM IST (Updated: 11 May 2022 5:18 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திரா-ஒடிசா கடற்கரையை நோக்கி ‘அசானி’ தீவிர புயல் நகருகிறது என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் உருவான அசானி தீவிர புயல், வங்கக்கடல் பகுதியில் இருந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வடக்கு ஆந்திரா கடற்கரையையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று இரவு நிலவியது.

இது வடக்கு-வடகிழக்கு திசையில் வடக்கு ஆந்திரா-ஒடிசா கடற்கரையையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்றும், அதனைத்தொடர்ந்து இன்றோ (புதன்கிழமை) அல்லது நாளையோ (வியாழக்கிழமை) புயலாக வலு இழக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் இன்று முதல் 14-ந்தேதி (சனிக்கிழமை) வரையிலான 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் வெப்பம் தணிந்தது

மேலும், கடந்த 2 தினங்களாக இந்த அசானி புயல் காரணமாக ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்களாலும், பல இடங்களில் நிலவும் மேக கூட்டங்களினாலும் தமிழகத்தில் வெப்பம் குறைந்து இருக்கிறது. இதில் அதிகபட்சமாக திருத்தணியில் 4 டிகிரி வரை வெப்பம் தணிந்து இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

அடுத்து வரும் நாட்களுக்கான வெப்பநிலை குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ‘இந்த புயல் கடந்து சென்ற பிறகு, வடமேற்கு திசையில் இருந்து வரும் காற்றை பொறுத்துதான் அடுத்ததாக தமிழகத்துக்கு வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்? என்று கூறமுடியும். அதை பொறுத்திருந்து பார்க்கலாம்' என்றார்.

வரும் நாட்களில் வெயிலின் தாக்கம்?

இந்த அசானி புயல் உருவாகும்போது, இதனால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று கூறியிருந்த நிலையில், தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து இருக்கிறதே? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பாலச்சந்திரன், ‘அசானி தீவிர புயலின் முனைப் பகுதி, தமிழக பகுதிகளை ஒட்டி இருப்பதால், இந்த மழை தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறது' என்றார்.

அசானி புயல் காரணமாக, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 65 கி.மீ. முதல் 85 கி.மீ. வரையிலான வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இதேபோல், ஆந்திர கடற்கரை பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘ஊத்தங்கரை, வடபுதுப்பட்டு தலா 5 செ.மீ., நந்தியார், லால்குடி, தென்பரநாடு, கே.வி.கே.காட்டுக்குப்பம், புடலூர் தலா 4 செ.மீ., திருப்பத்தூர், புள்ளம்பாடி, ஆலங்காயம், விரிஞ்சிபுரம், ஆம்பூர், மேலத்தூர், ஆத்தூர், கரியகோவில் தலா 3 செ.மீ., தேவிமங்கலம், சமயபுரம், துவாக்குடி, எண்ணூர், கேளம்பாக்கம், திருக்காட்டுப்பள்ளி, வெட்டிகாடு, குருங்குளம், திருக்கழுக்குன்றம், குடியாத்தாம், திருவையாறு, இந்துஸ்தான் பல்கலைக்கழகம், வாணியம்பாடி, அய்யம்பேட்டை தலா 2 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.

Next Story