நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்த வடமாநில சிறுமிகள் - போலீசில் பரபரப்பு புகார்..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 May 2022 1:23 AM GMT (Updated: 2022-05-11T06:53:07+05:30)

சென்னை அண்ணாநகரில் நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்த சிறுமிகள் அளித்த புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி:

சென்னை அண்ணாநகர், எச்.பிளாக் பகுதியில் உள்ள வீட்டில் சினிமா நடிகை மும்தாஜ் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வட மாநிலத்தை சேர்ந்த 2 சிறுமிகள் சில வருடங்களாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. 

அதில் ஒரு சிறுமி நேற்று வீட்டில் இருந்து வெளியே வந்து, தாங்கள் சொந்த ஊருக்கு செல்ல உரிமையாளர் அனுமதிக்கவில்லை என செல்போன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தகவல் தெரிவித்த சிறுமியை மீட்டு, அண்ணா நகர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். 

அப்போது அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்த தாங்கள் இருவரும் நடிகை மும்தாஜ் வீட்டில் வீட்டு வேலை செய்து வருவதாகவும், மேலும் அங்கு வேலை செய்ய தங்களுக்கு பிடிக்கவில்லை என்றும், சொந்த ஊருக்கு தாங்கள் செல்ல வேண்டும் என்று கூறினால் அனுப்பி வைக்க மறுப்பதாகவும் தெரிவித்தனர். 

இதையடுத்து நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்து வந்த 2 வட மாநில சிறுமிகளையும் அண்ணாநகர் போலீசார் மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் சிறுமிகளுக்கு வேறு ஏதாவது தொந்தரவு கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து குழந்தைகள் நல வாரிய அதிகாரிகளும் விசாரணை செய்ய உள்ளனர்.

Next Story