குடும்ப வறுமை: பச்சிளங்குழந்தையை 5 ஆயிரத்துக்கு விற்ற தாய்..!


குடும்ப வறுமை: பச்சிளங்குழந்தையை 5 ஆயிரத்துக்கு விற்ற தாய்..!
x
தினத்தந்தி 11 May 2022 2:12 AM GMT (Updated: 2022-05-11T07:42:04+05:30)

திருவள்ளூர் அருகே குடும்ப வறுமை காரணமாக பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை தாய் 5 ஆயிரத்துக்கு விற்றுள்ளார்.

திருவள்ளுர்:

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சத்தரை கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன். இவரது மனைவி சந்திரா. இவருக்கு கடந்த 5-ந்தேதி பேரம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நம்பிராஜன் கூலிவேலை செய்து வருகிறார். சந்திரா ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணி செய்து வருகிறார். போதிய வருமானம் இல்லாமல் அவர்கள் வாடி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று சந்திரா குழந்தையின்றி காணப்பட்டார். இது குறித்து அவரது உறவினர்கள் சந்திராவிடம் கேட்டபோது அவர் உரிய பதில் அளிக்கவில்லை. உடனடியாக அவர்கள் குழந்தையை காணவில்லை என்று மப்பேடு போலீசில் புகார் செய்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் சந்திரா, பிறந்து 5 நாட்களே ஆன தன்னுடைய ஆண் குழந்தையை தன்னுடன் பணியாற்றி வந்த ஜெயந்தியை பேரம்பாக்கத்திற்கு வரவழைத்து ரூ.5 ஆயிரத்துக்கு விற்றது தெரியவந்தது. 

அதைத்தொடர்ந்து போலீசார் ஜெயந்தியிடம் இருந்து குழந்தையை மீட்டனர். திருவள்ளூர் குழந்தைகள் நலக்குழுமத்தில் வைத்து சந்திராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குடும்ப வறுமை காரணமாக குழந்தையை விற்றது தெரியவந்தது. போலீசார் சந்திரா மற்றும் ஜெயந்தியிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story