தஞ்சை: ஆடிட்டர் கொலை வழக்கு - 4 பேர் கைது
தஞ்சையில் ஆடிட்டர் கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை கரந்தை சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் பி.மகேஸ்வரன் (வயது 45). ஆடிட்டர். இவருடைய அலுவலகம் கொண்டிராஜபாளையத்தில் உள்ளது. மகேஸ்வரன் தன்னுடைய வீட்டுக்கு அருகில் 100 மீட்டர் தொலைவில் பண்ணை வைத்துள்ளார். அதில் ஆடு, கோழி, தென்னை மரங்கள் போன்றவற்றை வளர்த்து வருகிறார்.
இந்த பண்ணைக்கு எதிரில் மாநகராட்சி குளியல் மற்றும் கழிவறை கட்டிடம் உள்ளது. இதை ஆடிட்டர் மகேஸ்வரன் சமீபத்தில்தான் ஏலத்திற்கு எடுத்துள்ளார். இந்த ஏலம் விவகாரத்தில் மகேஸ்வரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு தனது பண்ணையில் மகேஸ்வரன் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல் வந்தது. அந்த கும்பல் திடீரென பண்ணைக்குள் புகுந்து மகேஸ்வரனை சரமாரியாக வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
அதன் பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சாவகாசமாக மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டது. மகேஸ்வரனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது மகேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். உடன் இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மகேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆடிட்டர் கொலை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த கொலையாளிகள் கார்த்தி, மணி, அரவிந்த் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story