ஜிப்மருக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்


ஜிப்மருக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்
x
தினத்தந்தி 11 May 2022 5:39 PM GMT (Updated: 2022-05-11T23:11:01+05:30)

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜிப்மருக்கு எதிராக காங்கிரஸ், பா.ம.க., தமிழ் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். மருத்துவ பதிவேடு அட்டை கிழிப்பு, சுற்றறிக்கை நகல் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜிப்மருக்கு எதிராக காங்கிரஸ், பா.ம.க., தமிழ் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். மருத்துவ பதிவேடு அட்டை கிழிப்பு, சுற்றறிக்கை நகல் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தி எதிர்ப்பு
புதுவை ஜிப்மரில் இயக்குனர் ராகேஷ் அகர்வால் இந்தி திணிப்பு நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக கூறி ஜிப்மர் நிர்வாகத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மாலை ஜிப்மர் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் துணை தலைவர் பி.கே. தேவதாஸ், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், இந்திராநகர் தொகுதி பொறுப்பாளர் ராஜகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பா.ம.க.
பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பா.ம.க. இளைஞர் அணி அமைப்பாளர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார்.
அதன்படி பா.ம.க.வினர் இன்று ராஜீவ்காந்தி சதுக்கம் அருகே கூடினார்கள். அங்கிருந்து மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் ஜிப்மர் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் வந்தவர்கள் இந்தி திணிப்பை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
ஜிப்மர் எதிரே வந்தபோது அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அதையும் மீறி பா.ம.க.வினர் முன்னேறி செல்ல முயன்றனர். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் பா.ம.க. நிர்வாகிகளே கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.
இதனால் அந்த இடத்திலேயே ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தி திணிப்பு முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது மாநில அமைப்பாளர் கணபதி பேசியதாவது:-
தமிழ் உரிமைப் போராட்டம்
அலுவல் மொழி தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசின் கருத்தை கண்டித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல் அறிக்கை வெளியிட்டார். வளர்ச்சிக்கு வழி இல்லாமல் இருந்த ஜிப்மருக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக அன்புமணி ராமதாஸ் இருந்தபோது ரூ.800 கோடி நிதியை ஒதுக்கினார். 1,400 புதிய பதவிகளையும் உருவாக்கினார்.
அதைத்தொடர்ந்து இங்கு கேத் லேப் உருவாக்கப்பட்டது. அதை திறக்க வந்தபோது அடிக்கல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்தது. அதைக்கண்ட அன்புமணி ராமதாஸ் தமிழில் அடிக்கல் வைத்தால்தான் திறப்பேன் என்று கூறிவிட்டார். அதன்பின் ஒரு மணிநேரத்தில் தமிழ் கல்வெட்டு கொண்டு வரப்பட்டது. அப்போதுதான் ஜிப்மரில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டன.
இப்போது 3 மொழிகளிலும் பெயர் பலகை உள்ளது என்று கவர்னர் கூறுகிறார். அது எங்கள் வழிகாட்டுதலின்படி தான் வந்தது. இப்போது அதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை கைவிட வேண்டும். இந்தியை திணிக்க விடமாட்டோம். மருத்துவ பதிவேடுகளில் தமிழை சேர்ப்பதில் என்ன குறை வந்துவிடும்.
இந்த இயக்குனர் வந்ததில் இருந்து 72 வகையான மருந்துகள் வாங்கவில்லை. ஆனால் கவர்னர் தவறான தகவல்களை கூறியுள்ளார். இது நோயாளிகளுக்கு எதிரான போராட்டம் அல்ல. இது தமிழ் உரிமைக்கான போராட்டம்.
இவ்வாறு கணபதி பேசினார்.
கிழித்து எறிந்தனர்
அதைத்தொடர்ந்து ஜிப்மர் இயக்குனரின் சுற்றறிக்கை நகல் மற்றும் இந்தியில் உள்ள மருத்துவ பதிவேடு அட்டைகளை பா.ம.க.வினர் கிழித்து எறிந்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தமிழ் அமைப்பினர்
ஜிப்மருக்கு எதிராக தமிழ் அமைப்பினரும் இன்று போராட்டத்தில் குதித்தனர். காமராஜ் சாலை சுப்பையா திருமண நிலையம் அருகில் இருந்து தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு ஜிப்மர் நோக்கி வந்தனர். இந்தி திணிப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி வந்த அவர்களை ஜிப்மர் 7-ம் நம்பர் கேட் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே தமிழ் அமைப்பினர் ஜிப்மர் இயக்குனரின் சுற்றறிக்கை நகலை தீ வைத்து எரித்தனர். உடனே அங்கிருந்த போலீசார் அதை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
30 பேர் கைது
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வலுக்கட்டாயமாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றனர். அப்போது தமிழ் தேசிய பேரியக்க செயலாளர் வேல்சாமி, உலக தமிழ்க்கழக அமைப்பாளர் தமிழுலகன், புதுவை மாநில நாம் தமிழர் கட்சி செயலாளர் சிவக்குமார், தமிழர் களம் அமைப்பாளர் அழகர், தமிழ்தேசிய பேரியக்க துணைப்பொதுச்செயலாளர் அருணபாரதி, பொருளாளர் இளங்கோவன், நாம் தமிழர் கட்சி பொருளாளர் இளங்கோவன், தொழிற்சங்க செயலாளர் ரமேஷ், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவுரி உள்பட சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான அனைவரும் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story