மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. திடீர் மோதல்


மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. திடீர் மோதல்
x
தினத்தந்தி 11 May 2022 8:01 PM GMT (Updated: 11 May 2022 8:01 PM GMT)

மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. மாநகராட்சி நிர்வாகத்தில் மேயரின் கணவர் தலையீடு இருப்பதாக அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டினர்.

மதுரை,

மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நடந்தது.

கடந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் தங்களுக்கு ஒரே பகுதியில் இருக்கை ஒதுக்கவில்லை என்று கூறி பிரச்சினை செய்தனர். எனவே நேற்று முன்னதாகவே வந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் ஒரே பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டனர். பின்னர் வந்த தி.மு.க. கவுன்சிலர்கள், அ.தி.மு.க.வினரிடம் நீங்கள், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் போய் அமருங்கள், என்றனர்.

இதுதொடர்பாக அ.தி.மு.க..-தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் நிலை உண்டானது. அப்போது மாமன்ற செயலாளர், அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில்தான் அமர வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

கதவை மூடினர்

அதனால் வேறு வழியின்றி அ.தி.மு.க. கவுன்சிலர்கள், சபையில் இருந்து வெளியேறி மேயர் இந்திராணியிடம் முறையிட அவரது அறைக்கு சென்றனர். அவர்களை பின் தொடர்ந்து பத்திரிகையாளர்களும் அங்கு சென்றனர். அப்போது பத்திரிகையாளர்களை உள்ளே வரவிடாமல் தடுக்க மேயரின் கணவர் பொன் வசந்த் மற்றும் சிலர் அந்த கதவை மூடினர்.

இதனால் கதவுக்கு வெளியே இருந்த பத்திரிகையாளர்கள், வீடியோகிராபர்கள் கீழே விழுந்தனர். அதில் ஒருவருக்கு ரத்த காயமும் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பத்திரிகையாளர்கள், மேயரின் கணவர் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அவர்களை மேயரின் கணவர் பொன்வசந்த் சமரசம் செய்தார்.

மேயர் கணவரின் தலையீடு

இந்த சம்பவம் குறித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூறியதாவது:-

நாங்கள் மேயரை அவரது அறையில் சந்திக்க சென்றபோது மேயரின் கணவர் பொன்.வசந்த் மற்றும் மேயரின் உறவினர்கள் எங்களை தடுத்ததால் மோதலானது. மதுரை மேயரின் கணவர், பொன்.வசந்த் மாநகராட்சி நிர்வாகத்தில் முழுமையாக தலையிடுகிறார். மாநகராட்சியில் டெண்டர் யாருக்கு ஒதுக்க வேண்டும் என்பதனை மேயரின் கணவர்தான் முடிவு செய்கிறார். எனவே முதல்-அமைச்சர் ஸ்டாலின், மதுரை மேயர் சுயமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story