மெட்ரோ ரெயில் 4-ம் கட்ட பணிக்கு தடை கேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை


மெட்ரோ ரெயில் 4-ம் கட்ட பணிக்கு தடை கேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
x
தினத்தந்தி 11 May 2022 11:12 PM GMT (Updated: 2022-05-12T04:42:37+05:30)

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்பட 7 கோவில்கள் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையை முடிக்காமல் மெட்ரோ ரெயில் 4-ம் கட்ட பணியை மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் 4-ம் திட்டப்பணியாக சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை ரெயில் பாதை அமைக்கப்படவுள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வழித்தடத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வடபழனியில் உள்ள முருகன் கோவில், வெங்கீஸ்வரர் கோவில், அழகர் பெருமாள் கோவில், விருகம்பாக்கம் சுந்தர வரதராஜப்பெருமாள் கோவில், வளசரவாக்கம் வேல்வீஸ்வரர் கோவில், பூந்தமல்லி வரதராஜப் பெருமாள் கோவில் மற்றும் அந்த கோவில் குளம் ஆகியவை உள்ளன. மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக புராதன சிறப்புமிக்க இந்த கோவில்களின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறைகளை முடிக்கவில்லை.

தேவாலயம்

மெட்ரோ ரெயில் 4-ம் திட்டத்தின் வழித்தடத்தில் உள்ள சாந்தோம் தேவாலயம், ரோசரி தேவாலயம் உள்ளிட்டவை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறைகளுக்கு பரிசீலிக்கப்பட்டுள்ளது. ஆனால் நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த புராதன சிறப்பு மிக்க இந்த 7 கோவில்களும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறைகளுக்கு பரிசீலிக்கப்படவில்லை. மெட்ரோ முதல் கட்டப்பணிகள் நடந்தபோது சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் விக்டோரியா அரங்கம் போன்ற புராதன கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுரங்கம் தோண்டப்பட்டு மெட்ரோ ரெயில் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. அதேபோல மெட்ரோ ரெயிலின் 4-ம் திட்டத்தையும் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

தடை வேண்டும்

மேலும் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தும்போது அரசு மற்றும் தனியார் நிலங்களை விட்டுவிட்டு கோவில் நிலங்களே கையகப்படுத்தப்படுகிறது. எனவே, மெட்ரோ ரெயிலின் 4-ம் திட்டப்பணிகளால் பாதிக்கப்படும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட 7 கோவில்களையும் புராதன கோவில்களாக அறிவிக்க வேண்டும். அத்துடன் இந்த கோவில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மெட்ரோ ரெயிலின் திட்டப்பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.

Next Story