மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து நடிகர் ராதாரவி தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு


மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து நடிகர் ராதாரவி தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு
x
தினத்தந்தி 12 May 2022 7:11 PM GMT (Updated: 12 May 2022 7:11 PM GMT)

மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து நடிகர் ராதாரவி தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும், பிரபல நடிகருமான ராதாரவி, சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், “சென்னை சாலிக்கிராமத்தில் எங்கள் சங்க கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், கட்டிட திட்ட அனுமதியை மீறி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும், எனவே, கட்டிட திட்ட ஒப்புதல் ஆவணத்தை வழங்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினர். இதன்படி உரிய ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளோம். இந்த கட்டிடம் கட்ட 2010-ம் ஆண்டு திட்ட அனுமதி பெறப்பட்டது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்னர் இதுபோல நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படுகிறது. எனவே, இந்த நோட்டீசுக்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு மனுதாரர் சங்கத்தின் சார்பில் பதிலளிக்கப்பட்டு விட்டது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை” என்று வாதிடப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

Next Story