பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்ட லஞ்சம் கொடுத்த வேதனையில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்ட லஞ்சம் கொடுத்த வேதனையில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 12 May 2022 8:03 PM GMT (Updated: 12 May 2022 8:03 PM GMT)

பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்ட லஞ்சம் கொடுத்ததால் மனமுடைந்து விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலக பணி மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் கமுதக்குடி கிராமத்தை சேர்ந்தவர் லெனின். இவருடைய மகன் மணிகண்டன்(வயது 25). தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வந்த மணிகண்டன், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு விண்ணப்பித்தார். இதையடுத்து வீடு கட்டிக்கொள்ள அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தது. இந்த நிலையில் வீடு கட்டும் திட்ட பணிகளுக்காக நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக(ஓவர்சீயர்) வேலை பார்க்கும் மகேஸ்வரன் என்பவர் தன்னிடம் லஞ்சம் வாங்கியதாகவும், இதனால் தான் கடனாளியாகி விட்டதாகவும் பேசி அதை மணிகண்டன் வீடியோவில் பதிவு செய்தார். அவர் உருக்கமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிகிச்சை பலனின்றி சாவு

இதனிடையே லஞ்சம் கொடுத்ததால் மனமுடைந்த மணிகண்டன் பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து பேரளம் போலீசார் மகேஸ்வரன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பணியிடை நீக்கம்

மேலும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலக பணி மேற்பார்வையாளர் மகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்தார். மேலும் அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து உள்ளார்.

இந்த நிலையில், மகேஸ்வரனை கைது செய்ய கோரியும், தற்கொலை செய்த மணிகண்டனின் வீட்டை அரசே கட்டிக்கொடுக்க வலியுறுத்தியும் கொல்லுமாங்குடியில் பா.ம.க.வினர் நேற்று சாலை மறியல் செய்தனர்.

Next Story