முன்கூட்டியே விடுதலை கோர தண்டனை கைதிகளுக்கு உரிமை இல்லை -ஐகோர்ட்டு உத்தரவு


முன்கூட்டியே விடுதலை கோர தண்டனை கைதிகளுக்கு உரிமை இல்லை -ஐகோர்ட்டு உத்தரவு
x

முன்கூட்டியே விடுதலை கோர தண்டனை கைதிகளுக்கு உரிமை இல்லை -ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன், கடந்த 2001-ம் ஆண்டு காலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது, மர்ம கும்பலால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சோமு, பாலமுருகன், ஹரிகரன் உள்பட பலரை கைது செய்தனர். இந்த வழக்கில் பலருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் தன் மகன் ஹரிகரனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி அவரது தாயார் சரோஜினி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகளை விடுவித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையின்படி தன் மகனை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். சிறையில் நன்னடத்தை விதியை அவர் கடைபிடிக்கவில்லை என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், முன்கூட்டியே விடுதலை கோர சட்டப்படி தண்டனை கைதிகளுக்கு உரிமையில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story