ஆண்டுதோறும் வரி நிர்ணயம் செய்யும் சட்டம் கொண்டு வந்தது ஏன்? -அமைச்சர் கே.என்.நேரு பேட்டி


ஆண்டுதோறும் வரி நிர்ணயம் செய்யும் சட்டம் கொண்டு வந்தது ஏன்? -அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
x
தினத்தந்தி 12 May 2022 11:15 PM GMT (Updated: 2022-05-13T04:45:53+05:30)

ஆண்டுதோறும் வரி நிர்ணயம் செய்யும் சட்டம் கொண்டு வந்தது ஏன்? என அமைச்சர் கே.என்.நேரு வளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அலுவலகத்தில், 126 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை, கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 71 நபர்களுக்கு நிதியுதவி உள்ளிட்டவைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி பணி நியமன ஆணை வழங்கினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.

நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் புதிய சொத்து வரி சட்டம் கொண்டு வந்ததற்கு காரணம் பணி நிரவல் தான். நிர்வாகம் காரணமாக வரி உயர்த்துவதற்கோ, வரி மேல்முறையீடோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே முடிவு செய்ய வழி உள்ளதாக சட்டம் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் 53 சதவீத இடங்கள் நகராட்சி துறை எல்லையில் உள்ளது. தமிழகத்தில் சொத்து வரி உயர்வு என்பது பல ஆண்டுகளுக்கு பின்னர் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது.

விலைவாசி உயர்வு ஏற்படவில்லை

ஆனால் ஆண்டு தோறும் புதிய திட்டங்களான சாலை அமைத்தல், கழிவுநீர் வடிகால், மழைநீர் வடிகால், அனைத்து இடங்களில் பூங்கா, விளையாட்டு மைதானம் அமைத்தல் உள்ளிட்டவைகள் செய்ய வேண்டியுள்ளது. சில பேர் சொத்து வரிகளை செலுத்தாமலே இருந்து வருகின்றனர்.

அனைவருக்கும் ஒரே மாதிரியான திட்டங்களை செயல்படுத்தவே வரி உயர்வு கொண்டு வரப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு தான் 100 முதல் 300 சதவீதம் வரை வரி விதித்தனர். ஆனால் 25 முதல் 150 சதவீதம் வரை தான் உயர்த்தியுள்ளோம்.

ஆண்டுதோறும் வரி நிர்ணயம்

இவ்வாறு 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்து வரி உயர்வு செய்வது ஏற்புடையது அல்ல என்பதை உணர்ந்து, அந்தந்த பகுதிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆண்டு தோறும் வரி நிர்ணயம் செய்யலாம் என சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.

இந்த வரி உயர்வு மக்கள் பணி ஆற்றுவதற்குதான். விலை வாசி உயர்வு எல்லாம் வாய்ப்பு இல்லை. உதாரணமாக அனைத்து பகுதியிலும் குடிநீர் இணைப்பு, மார்க்கெட், பஸ் நிலையம், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வேண்டும் என மக்கள் கூறுகிறார்கள். அரசு ஒதுக்கும் நிதியை விட நகராட்சி நிர்வாகம் தங்களது சொந்த செலவில் செய்யதான் வரி உயர்வு. இதனால் விலைவாசி அதிகரிக்கவில்லை.

பொதுமக்கள் சங்கடப்படாத வகையில் தான் இந்த வரி உயர்வு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 1,800 சதுர அடி உள்ள வீடுகளுக்கு வரி உயர்வு ரூ.6 ஆயிரத்து 250 உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் இதே அளவு வீடுக்கு 88 ஆயிரம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் சொத்து வரி மிக குறைவான மாநிலம் தமிழகம்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story