நித்யானந்தாவுக்கு என்ன ஆச்சு? ‘‘சாகவில்லை... சமாதி நிலையில் இருக்கிறேன்’’ என அறிவிப்பு


நித்யானந்தாவுக்கு என்ன ஆச்சு? ‘‘சாகவில்லை... சமாதி நிலையில் இருக்கிறேன்’’ என அறிவிப்பு
x
தினத்தந்தி 12 May 2022 11:20 PM GMT (Updated: 12 May 2022 11:20 PM GMT)

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத சாமியார்களில் நித்யானந்தாவும் ஒருவர். பிரபல நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாக வீடியோ காட்சி வெளியானபோது மிகவும் பிரபலமாக பேசப்பட்டார் நித்யானந்தா.

பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தா பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார்.

ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார்.

இந்த நிலையில் நித்யானந்தா இறந்துவிட்டதாக இணையதளங்களில் செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா தரப்பில் இருந்து சில முகநூல் (பேஸ்புக்) பதிவுகள் வெளியாகி வருகின்றன.

‘‘சமாதியில் இருக்கிறேன்’’

“நான் இறந்துவிட்டதாக சிலர் புரளிகளை கிளப்பி வருகிறார்கள். நான் தற்போது சமாதியில் இருக்கிறேன். ஆனால் இறக்கவில்லை. பேசும் திறன் இல்லை. சொற்பொழிவாற்ற சில காலம் ஆகும்.

27 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். பிரபஞ்ச சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள். 18 வயது இளைஞனை போல இதயம் துடித்து, உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நித்ய சிவபூஜை தொடர்ந்து நடைபெறுகிறது” என்று ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆன்மிக வகுப்பை சீர் குலைக்க...

மற்றொரு பதிவு நித்யானந்தா சமாதியில் இருப்பதால் அவரது முகநூல் பக்கத்தில் சீடர்களால் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் “வருடத்தில் பல நாட்கள் சாமி சமாதியில்தான் இருப்பார். சமாதியில் இருந்து எழுந்த பின், ஆன்மிக பயிற்சி வகுப்புகள் எடுப்பார். அடுத்தமாதம் சுவாமிஜி 21 நாள் ஆன்மிக வகுப்பு ஒன்றை ஆன்லைன் மூலமாக எடுக்கபோகிறார். இந்த ஆன்மிக பயிற்சி வகுப்பை சீர்குலைக்கவே இதுபோன்ற வதந்தியை பரப்பி வருகின்றனர்.

பயிற்சி வகுப்பிற்காக சாமி சமாதி நிலைக்கு சென்றிருப்பதால் இப்பொழுது பேசமாட்டார் என்று தெரிந்துகொண்டு தேவையில்லாத வதந்தியை அவர்கள் இஷ்டத்திற்கு பரப்பி வருகின்றனர். இந்து விரோதிகளை ஒழிக்காமல் அண்ணாமலையாரின் ஆட்டம் முடியாது. திரும்பி வந்துடாருன்னு போய் சொல்லு... திருவண்ணாமலை-அருணாச்சலம்-நித்யானந்தா” என்று கூறப்பட்டு உள்ளது.

“அவ்வளவு சீக்கிரமா எனக்கு ‘என்ட் கார்டு' போட முடியாது” என்று இன்னொரு பதிவும் வெளியாகி உள்ளது.

Next Story