காய்கறி விலை தொடர்ந்து உயர்வு


காய்கறி விலை தொடர்ந்து உயர்வு
x
தினத்தந்தி 14 May 2022 11:27 PM GMT (Updated: 2022-05-15T04:57:58+05:30)

காய்கறிகள் வரத்து குறைந்து வந்ததன் விளைவாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் நேற்றும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்து இருந்தது. அதிலும் குறிப்பாக, தக்காளி வரத்து பெருமளவில் குறைந்து, அதன் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி செல்கிறது. நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது.

இது வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரையில் விற்பனை ஆனது. வழக்கமாக மழை காலத்தில்தான் தக்காளி விலை இதுபோன்று விலை அதிகரிக்கும். ஆனால் தற்போது கோடைகாலத்திலும் அதன் விலை அதிகரித்து இருப்பது, இல்லத்தரசிகளின் பட்ஜெட்டில் செலவை அதிகரித்துள்ளது. இன்னும் 2 வாரங்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும் என்று கூறப்படுகிறது

தக்காளி விலையை போல, பீன்ஸ் விலையும் ராக்கெட் வேகத்தில் உயருகிறது. அதன்படி, நேற்று ஒரு கிலோ பீன்ஸ் ரூ.80 முதல் ரூ.95 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதுபோல மேலும் சில காய்கறி விலையும், கடந்த வாரத்தை காட்டிலும் சற்று உயர்ந்து இருக்கிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு வரவேண்டிய காய்கறியில் தற்போது 60 சதவீதம் வரை மட்டுமே நேற்று வந்ததாகவும், இதன் காரணமாகவே காய்கறி விலை உயர்ந்து இருப்பதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


Next Story