அரசு ஊழியர்களை மிரட்டும் ஆளும் கட்சியினர் - எடப்பாடி பழனிசாமி


அரசு ஊழியர்களை மிரட்டும் ஆளும் கட்சியினர் - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 14 May 2022 11:57 PM GMT (Updated: 2022-05-15T05:27:02+05:30)

கள்ள லாட்டரி விற்பனை; அரசு ஊழியர்களை ஆளும் கட்சியினர் மிரட்டுவதை தி.மு.க. அரசின் காவல் துறை வேடிக்கை பார்க்கிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ள லாட்டரி விற்பனை

ஈரோடு, முல்லை நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற நூல் வியாபாரி, தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருவதாகவும், இவர் ஈரோடு கருங்கல்பாளையத்தில் கள்ள லாட்டரி விற்பனை செய்துவரும் ஈரோடு மாநகராட்சி 39-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கீதாஞ்சலி என்பவரின் கணவர் செந்தில்குமாரிடம் லாட்டரி சீட்டு வாங்கி வந்திருக்கிறார்.

இதுவரை ரூ.62 லட்சம் பணத்தை இழந்துள்ளதாகவும், தான் உயிருடன் இருந்தால், இன்னும் பணத்தை இழந்துவிட நேரிடும் என்பதால், தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், பல குடும்பங்கள் இந்த கள்ள லாட்டரி விற்பனையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வீடியோ ஒன்றில் அவர் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு பேசியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடவுளுக்கே வெளிச்சம்

காவல் துறைக்கு தெரியாமல் ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் இந்த லாட்டரி விற்பனை நடக்க சாத்தியமே இல்லை. இதுபோல் எத்தனை பேர் இந்த கள்ள லாட்டரிகளை வாங்கி, தங்கள் பணத்தை இழந்து நடுத்தெருவுக்கு வந்திருப்பார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

ஆனால், வெளிப்படையாக நடந்து வரும் இந்த கள்ள லாட்டரி விற்பனையைத் தடுக்க இதுவரை காவல் துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குறியது; கண்டனத்துக்குறியது. தனது கணவர் தற்கொலை செய்துகொண்டது குறித்து ராதாகிருஷ்ணணின் மனைவி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை

2-வது சம்பவத்தில் வேலூர் மாவட்டம், ராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக பணியாற்றிவர் ராஜசேகர். இவர், நேற்று இரவு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அக்கடிதத்தில் தனது தற்கொலைக்கு காரணம் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் அரி என்பவர்தான் என்றும், வேறு யாரும் இல்லை என்றும், ஊராட்சிக்கு வரும் நிதி முழுவதையும் தனக்குதான் வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து வற்புறுத்துவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

காவல் நிலையத்தில் புகார்

மேலும், தனது தம்பிக்கு ரேஷன் கடையில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித்தராமல் கவுன்சிலர் அரி தன்னை அலைக்கழித்து மிரட்டுவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட ராஜசேகரின் உறவினர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. தங்கள் தற்கொலைக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் தான் காரணம் என்று வெளிப்படையாக தெரிவித்துவிட்டு, 2 அப்பாவிகள் தங்கள் உயிர்களை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

காவல் துறை வேடிக்கை பார்க்கிறது

மாநிலம் முழுவதும் சமூக விரோதிகள் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பணத்தை இழந்து தவிக்கின்ற நிகழ்வுகளையும், அரசு ஊழியர்களை ஆளும் கட்சியினர் மிரட்டுவதையும் தி.மு.க. அரசின் காவல் துறை வேடிக்கை பார்த்துக்கொண்டு வருகிறது.

எங்களது ஆட்சியில் பெண்கள் மற்றும் முதியவர்களின் நண்பனாக செயல்பட்டுக்கொண்டிருந்த காவலன் செயலி, தி.மு.க. அரசில் காவல் செயலியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தனது செயல்பாட்டையும் நிறுத்தியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முதல்-அமைச்சரின் பதில் என்ன?

காவல் துறையின் மீதே பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கும் அளவுக்கு கொள்ளைக் கும்பல் தி.மு.க. அரசில் பலம் பெற்றுள்ளதைப் பார்க்கும்போது, தி.மு.க. அரசின் விளம்பர ஆட்சி இன்னும் எத்தனை நாள் நிலைக்கும் என்ற கேள்வியும் தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. இதற்கு என்ன பதில் அளிக்கப்போகிறார் முதல்-அமைச்சர்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story