நெல்லை கல்குவாரி விபத்து - உரிமையாளர் சங்கரநாராயணன் கைது...!


நெல்லை கல்குவாரி விபத்து - உரிமையாளர் சங்கரநாராயணன் கைது...!
x
தினத்தந்தி 15 May 2022 5:56 AM GMT (Updated: 15 May 2022 6:00 AM GMT)

நெல்லை கல்குவாரி விபத்தில் கல்குவாரியின் உரிமையாளர் சங்கரநாராயணனை போலீசார் கைது செய்து உள்ளனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் உடைத்து வைத்திருந்த கற்களை லாரிகள் மூலம் எம் சாண்ட் தயாரிக்கும் பகுதிக்கு எடுத்துச்செல்லும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக ராட்சச பாறை சரிந்த விழுந்ததில், தொழிலாளர்கள் 6 பேர் 300 அடி பள்ளத்தில் சிக்கி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த முன்னீர்பள்ளம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 300 அடி பள்ளத்தில் 3 ஜேசிபி இயந்திரம் மற்றும் இரண்டு லாரிகள் சிக்கியுள்ளது.

ராட்சச பாறை விழுந்த இடத்தில் ஆறு தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், இருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த தொழிலாளி கூறிய தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.

மழையின் கரணமாக பள்ளத்தில் மண்சரிவு மற்றும் கற்கள் விழுவதனால், மீட்புப்பணியின் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்காக தூத்துக்குடியில் இருந்து மிகப்பெரிய கிரேன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட உள்ளது. அவற்றின் மூலம் மீட்புப்பணியை எளிதாக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகிறனர்.

இந்த நிலையில் கல்குவாரியின் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக குவாரியின் உரிமையாளர் சங்கர நாராயணனை போலீசார் கைது செய்து உள்ளனர். தற்போது விபத்து குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக கல்குவாரி உரிமையாளர் சங்கர நராயணனின் மகனும் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story