பிரதமர் மோடி 26-ந் தேதி சென்னை வருகை - ரூ.12,413 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்


பிரதமர் மோடி 26-ந் தேதி சென்னை வருகை - ரூ.12,413 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
x

மத்திய அரசு சார்பில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட இருக்கும் ரூ.12,413 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னை,

தமிழ்நாட்டில் ரூ.12,413 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள், மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 26-ந் தேதி (வியாழக்கிழமை) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்கிறார்கள்.

அங்கிருந்து நேரடியாக விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி காரில் வருகிறார். இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள மத்திய அரசின் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி ரூ.12 ஆயிரத்து 413 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி பேசுகிறார்.

இதன்படி பெங்களூரு-சென்னை 4 வழி விரைவுச் சாலையின் 3-வது கட்டப்பணி, திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் மல்டி மாடல் லாஜிஸ்டிக் (பல்முனை சரக்கு போக்குவரத்து) பூங்கா, ஓசூர்-தர்மபுரி இடையிலான 2-வது மற்றும் 3-வது கட்ட நெடுஞ்சாலை பணிகள், மீன் சுருட்டி-சிதம்பரம் இடையே புதிதாக அமைக்கப்படும் நெடுஞ்சாலை ஆகிய பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், மதுரை-தேனி இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில் பாதையையும், மத்திய நகர்ப்புற வீட்டு வசதித்துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை சார்ந்த புதிய திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

Next Story