கல்குவாரியில் சிக்கிய மேலும் ஒருவர் பலி: பாறைகள் தொடர்ந்து சரிவதால்மற்ற 2 பேரை மீட்பதில் சிக்கல்


கல்குவாரியில் சிக்கிய மேலும் ஒருவர் பலி: பாறைகள் தொடர்ந்து சரிவதால்மற்ற 2 பேரை மீட்பதில் சிக்கல்
x
தினத்தந்தி 17 May 2022 2:37 AM GMT (Updated: 2022-05-17T08:07:43+05:30)

நெல்லை கல்குவாரியில் பாறைகளுக்கு இடையே சிக்கிய மேலும் ஒருவர் பலியானார். பாறைகள் தொடர்ந்து சரிவதால் மற்ற 2 பேரை மீட்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

நெல்லை,

நெல்லை அடைமிதிப்பான்குளம் பகுதியில் 400 அடி ஆழம் கொண்ட தனியார் கல்குவாரியில் கடந்த 14-ந்தேதி இரவு கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ராட்சத பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் தொழிலாளர்கள் 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

தீயணைப்பு படையினர் நீண்ட போராட்டத்துக்கு பிறகு முருகன், விஜய், செல்வம் ஆகிய 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு செல்வம் பரிதாபமாக இறந்தார்.

இடிபாடுகளில் சிக்கிய மற்ற 3 பேரை மீட்பதற்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர் 30 பேர் வரவழைக்கப்பட்டனர். நேற்று காலை 10.30 மணிக்கு முதற்கட்டமாக 3 வீரர்கள் கயிறு மூலம் கல்குவாரியில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கிய ஒருவர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அந்த சமயத்தில் அடுத்தடுத்து பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் மீட்பு குழுவினர் 2 மணி அளவில் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி விட்டு மேலே ஏறினார்கள். இதனால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து மீண்டும் மாலை 6 மணியளவில் மீட்புபணி தொடங்கியது.

கயிறு கட்டி தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்தவர்கள் பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்தவரின் அருகே சென்றார்கள்.

அப்போது அவர் உயிரிழந்து இருந்தது தெரியவந்தது. அவர் யார்? என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவரது உடலில் கயிறு கட்டி மீட்கும் பணியை மேற்கொண்டனர். இந்த பணி இரவு வரை நீடித்தது. மேலும் இடிபாடுகளில் சிக்கிய மற்ற 2 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. பலியானது யார்? என்பது தெரியாததால் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

கல்குவாரியில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குவாரி உரிமையாளரான சங்கர நாராயணனை ஏற்கனவே கைது செய்தனர். நேற்று கல்குவாரி மேலாளர் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ஜெபஸ்டியான் (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story