இலங்கைக்கு நிவாரணப்பொருட்கள் கப்பலில் ஏற்றும் பணி தீவிரம்


இலங்கைக்கு நிவாரணப்பொருட்கள் கப்பலில் ஏற்றும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 17 May 2022 2:41 AM GMT (Updated: 17 May 2022 2:41 AM GMT)

இலங்கைக்கு அனுப்பப்பட உள்ள நிவாரணப்பொருட்களை சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் ஏற்றும் பணி தீவிரமாக நடந்தது.

சென்னை, 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் தமிழக அரசு சார்பில் ரூ.80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அாிசி, ரூ.15 கோடி மதிப்பில் 500 டன் பால் பவுடர், ரூ.28 கோடி மதிப்பில் 137 வகையான உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இதற்காக சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழக அரசின் மருத்துவ பணிகள் கழகத்தின் மாவட்ட மருந்து கிடங்கில் இருந்து மருந்து பொருட்கள், ஆவின் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் பால் பவுடர்கள் சேலம், ஈரோடு மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் அம்மாபாளையத்தில் இருந்து லாரிகள் மூலம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து துறைமுகத்திற்கு லாரிகள் மூலம் அரிசியும் கொண்டு வரப்பட்டது.

துறைமுகத்தில் அம்பேத்கர் கப்பல் நிறுத்தும் இடத்தில் உள்ள ‘டபிள்யூ.கி்யூ.4 பெர்த்’தில் நிறுத்தப்பட்டுள்ள ‘டான் பின்ஹ்-99’ என்ற கப்பலில் அரிசி, பால் பவுடர் மற்றும் மருந்து பொருட்களை லாரியில் இருந்து கிரைன் உதவியுடன் கப்பலில் ஏற்றும் பணி நேற்று தொடங்கியது.

மருந்து பொருட்களை பொறுத்தவரையில் முதல்கட்டமாக ரூ.8 கோடியே 87 லட்சத்து 9 ஆயிரத்து 593 மதிப்பில் 55 வகையான அத்தியாவசிய மருந்துகளும், 2 சிறப்பு மருந்துகளும் 700 அட்டை பெட்டிகளில் அனுப்பப்படுகிறது.

அரிசி மற்றும் பால் பவுடர் ‘பேக்கிங்’குகளில் ‘தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன்..... தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்’ என்ற வாசகமும், மத்திய, மாநில அரசுகளின் முத்திரைகளும் பதிக்கப்பட்டு இருந்தன. ஆனால் மருந்து பொருட்கள் அடங்கிய பெட்டிகளில் அரசின் விளம்பரம் எதுவும் இல்லாமல் ‘இந்திய மக்கள் மூலம் இலங்கை மக்களுக்கு தருகிற பொருட்கள்’ என்ற வாசகம் மட்டும் இடம் பெற்றுள்ளது.

இந்த நிவாரணப்பொருட்கள் இலங்கையில் எந்த துறைமுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை மத்திய அரசுதான் ஒருங்கிணைக்கும். தேவைப்பட்டால் மற்றொரு கப்பலில் ஏற்றி அனுப்பவும் வாய்ப்பு உள்ளது. கப்பல்களில் நிவாரணப்பொருட்கள் முழுவதும் ஏற்றப்பட்ட பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைக்க வாய்ப்பு உள்ளது.

மேற்கண்ட தகவல்களை துறைமுக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story