எடப்பாடி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 25 பேர் படுகாயம்...!
எடப்பாடி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 25 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
எடப்பாடி,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இயங்கிவரும் பிரபல தனியார் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி பேருந்து நேற்று மாலை கல்லூரி முடிந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு சங்ககிரி வழியாக எடப்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தது.
அந்தப் பேருந்து எடப்பாடி சங்ககிரி பிரதான சாலையில் வந்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் கன மழை பெய்து கொண்டிருந்தது. மழை பெய்து கொண்டிருந்த நிலையில் அவ்வழியாக வந்த வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக பயணித்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில் எடப்பாடி சங்ககிரி பிரதான சாலையில் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து சற்றும் வேகத்தை குறைக்காமல் முன்னால் சென்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பேருந்து எதிர் திசையில்,எடப்பாடியில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து உடன் நேருக்கு நேர் பலத்த சத்தத்துடன் மோதியது.
இதனால் இரு வாகனங்களும் அப்பளம் போல நொறுங்கி, சாலையோர மரத்தின் மீது மோதி நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்திட்ட இந்த விபத்தில், தனியார் கல்லூரி பேருந்தில் வந்த 15-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மற்றும் தனியார் பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு பேருந்தில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். தகவலறிந்து எடப்பாடி, சங்ககிரி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் பலத்தக்காயமடைந்த தனியார் பேருந்து ஓட்டுநரான எடப்பாடி பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (42), கல்லூரி பேருந்து ஓட்டுனரான மேட்டூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (32) மற்றும் தனியார் பேருந்தில் பயணம் செய்த இருப்பாளி பகுதியைச் சேர்ந்த சின்ன கண்ணு (60) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றிய கொங்கணாபுரம் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story