3 மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிப்பு
திருக்கனூர் அருகே வீட்டில் நிறுத்தி இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்.
திருக்கனூர்
திருக்கனூர் அருகே வீட்டில் நிறுத்தி இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்
திருக்கனூர் அருகே உள்ள ஆண்டிப்பாளையம் ரைஸ்மில் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 68). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். நேற்று இரவு சுப்பிரமணியன், அவரது மனைவி விஜயா, பேரன் துளசிராமன், பேத்தி லீலா ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டு வராண்டாவில் நிறுத்தி வைத்திருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தன. இதனால் வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. மூச்சு திணறல் ஏற்பட்டு சுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தினர் திடுக்கிட்டு எழுந்தனர்.
தீப்பற்றி எரிந்தன
அப்போது வராண்டாவில் மோட்டார் சைக்கிள்கள் தீப்பற்றி எரிவதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மோட்டார் சைக்கிள்கள் மீது தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர். அதற்குள் 3 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சேதமடைந்தன.
அதேநேரத்தில் மோட்டார் சைக்கிள்களின் பெட்ரோல் டேங்க் வெடித்து இருந்தால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருந்து இருக்கும். அப்படி நடக்காததால் வீட்டில் இருந்த சுப்பிரமணியன் உள்பட 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இது குறித்து அறிந்து திருக்கனூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
போலீசார் விசாரணை
யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் சுப்பிரமணியனின் மோட்டார் சைக்கிள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தது தெரியவந்துள்ளது. அவர்கள் யார்? முன்விரோதம் காரணமாக பழிவாங்கும் நோக்கத்தில் இதை செய்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து மர்மநபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்கள் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் ஆண்டிப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story