ரூ.21,630 கோடி கடன் வழங்க இலக்கு
திருப்பூர் மாவட்டத்தில் வரும் ஆண்டில் ரூ.21 ஆயிரத்து 630 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் வினீத் கூறினார்.
ரூ.21,630 கோடிக்கு கடன் இலக்கு
திருப்பூர் மாவட்ட வங்கியாளர்கள் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் சுப்பராயன் (திருப்பூர்), சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். 2022-23-ம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் கலெக்டர் வினீத் பேசியதாவது:-
திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் ஆண்டுதோறும் ஆண்டுக்கடன் திட்டம் வெளியிடுவது போல இந்த ஆண்டு கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து வங்கிகளும் இணைந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட வேண்டும். முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு ரூ.21 ஆயிரத்து 630 கோடியாகும். இதில் வேளாண்மை துறைக்கு ரூ.8 ஆயிரத்து 206 கோடியும், சிறுவணிக துறைக்கு ரூ.12 ஆயிரத்து 946 கோடியும், பிற முன்னுரிமை கடன்களுக்கான வீட்டுக்கடன், மரபுசாரா எரிசக்தியுடன் கல்விக்கடன் மற்றும் மற்ற கடன்களுக்கு ரூ.478 கோடியும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்விக்கடன் சிறப்பு முகாம்
இது சென்ற ஆண்டு கடன் திட்டத்தை விட ரூ.8 ஆயிரத்து 215 கோடி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்விக்கடனுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்களை பரிசீலனை செய்து மாணவர்களுக்கு உடனடியாக கல்வி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சிறப்பாக கடன் வழங்கிய வங்கிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம், வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
---