காரில் கடத்திய 22 கிேலா கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை,
ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 கிலோ கஞ்சா பறிமுதல்
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையில் ஆபரேஷன் 3.0 என்ற பெயரில் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அருப்புக்கோட்டை புறவழிச்சாலை தொட்டியாங்குளம் ெரயில்வே பாலம் சந்திப்பு பகுதியில் உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் நேற்று இரவு ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில் அந்த வழியாக வந்த காரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். காரில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 22 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காரையும், கஞ்சாவையும் டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.
4 பேர் கைது
தொடர்ந்து காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் பாளையம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30), பேரையூரை சேர்ந்த விஜயன் (33), சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த மதன்ராஜ் (23), ஆந்திராவை சேர்ந்த சிரஞ்சீவி (36) என்பதும், கஞ்சா ஆந்திராவில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.