விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் திருட்டு
விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் திருட்டுபோனது.
வேப்பந்தட்டை:
நகைகள் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தழுதாழையை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 65). விவசாயி. இவர் கடந்த 2-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து, அருகில் வசிப்பவர்கள் ரெங்கசாமிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரெங்கசாமி கள்ளக்குறிச்சியில் இருந்து விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 22 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
வலைவீச்சு
இது குறித்து அரும்பாவூர் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் திருட்டு சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.