மின்னல் ரவுடி வேட்டை ஆபரேஷன்: கடலூர் மாவட்டத்தில் 22 ரவுடிகள் கைது போலீஸ் சூப்பிரண்டு தகவல்
மின்னல் ரவுடி வேட்டை ஆபரேஷன் மூலம் கடலூர் மாவட்டத்தில் 22 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறினார்.
மின்னல் ரவுடி வேட்டை
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரவுடிகளை கண் காணித்து கைது செய்வதற்கு மின்னல் ரவுடி வேட்டை என்ற ஆபரேஷன் திட்டத்தை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கினார். அதன்பேரில் முக்கிய ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தி தமிழகம் முழுவதும் ரவுடிகளை கைது செய்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் ரவுடிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம், நேற்று ஆகிய 2 நாட்கள் தீவிரமாக களம் இறங்கினர்.
22 ரவுடிகள் கைது
அதில், ரவுடிகள், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்ற வழக்குகளில் இதுவரை கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 22 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் உரிமத்தை புதுப்பிக்காமல் வைத்திருந்த 2 பேரிடம் இருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் 8 கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 18 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 57 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சட்டம் -ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய 11 குற்றவாளிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து, நன்னடத்தை உறுதிமொழி பிணைபத்திரம் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறினார்.