தூத்துக்குடி கல்லூரியில் ஒரே நேரத்தில் 2219 பேர் புத்தகம் வாசித்து சாதனை
தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியில் ஒரே நேரத்தில் 2219 பேர் புத்தகம் வாசித்து சாதனை படைத்துள்ளனர்.
தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் கடந்த 9.9.2022 அன்று கல்லூரியின் உள்தர மதிப்பீட்டுக் குழு சார்பில் மெகா புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 219 பேர் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் பங்கேற்று, திருக்குறளில் 5 அதிகாரங்களை ஒருங்கிணைந்து வாசித்து, ஒரு அதிகாரத்தை மனப்பாடமாக இணைந்து ஒப்புவித்தனர்.
இந்த மெகா புத்தக வாசிப்பு நிகழ்வை சாதனை நிகழ்வாக இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு அங்கீகரித்து உள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஷிபானா, துணை முதல்வர் குழந்தை தெரேஸ், சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குநர் ஜோசபின் ஜெயராணி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் புனிதா தாரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் உள்தர மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் செரீனா மார்கரெட் வரவேற்று பேசினார். இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் மதிப்பீட்டாளர் கவிதா ஜெயின் சிறப்பு கலந்து கொண்டு சான்றிதழை வழங்கினார். அதனை கல்லூரி முதல்வர் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.