டயர் வெடித்ததில் வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 23 பேர் காயம்
டயர் வெடித்ததில் வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 23 பேர் காயமடைந்தனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலி கருப்பூர் கிராமத்தை சேர்ந்த 23 பேர் சமயபுரம் கோவிலுக்கு ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் மாலை அதே வேனில் அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். கீழப்பழுவூர்- வி.கைகாட்டி தேசிய நெடுஞ்சாலையில் பொய்யூர் கிராமத்தின் அருகே வந்தபோது, திடீரென வேனின் பின் பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த கோடாலி கருப்பூர் கிராமத்தை சேர்ந்த வசந்தகுமாரி (வயது 48), சகுந்தலா(56), கார்த்திகேயன் (49) உள்ளிட்ட 23 பேர் காயமடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழப்பழுவூர் போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.