சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை
தஞ்சை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
டிரைவர்
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள காமாட்சிபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவருடைய மகன் பிரபு(வயது 23). இவர், திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
அப்போது அங்கு 15 வயதான சிறுமி வேலையில் சேர்ந்தார். இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் சிறுமி வேலையை விட்டு நின்று விட்டார். பிரபுவும் வேலையை விட்டு விட்டு ஊருக்கு வந்து விட்டார்.
சிறுமி கர்ப்பம்
இந்த நிலையில் திருமணம் செய்வதாக கூறி சிறுமியுடன் பிரபு உல்லாசமாக இருந்துள்ளார். இதன் விளைவாக அவர் கர்ப்பம் அடைந்தார். அதன் பின்னர் சிறுமியை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்.
இது குறித்து திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிறுமிக்கு பெண் குழந்தையும் பிறந்தது.
23 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த வழக்கு விசாரணை தஞ்சையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது. நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு கூறினார்.அவர் தனது தீர்ப்பில், பிரபுவுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.