வேலூர் மாவட்டத்தில் 238 போலீசார் பணியிட மாற்றம்
வேலூர் மாவட்டத்தில் 238 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் ஒரே போலீஸ் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், 2-ம் நிலை காவலர்கள், முதல்நிலை காவலர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் மாவட்டத்திற்குள் பணியிட மாற்றம் செய்து கொள்வதற்கான கலந்தாய்வு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த மாதம் நடந்தது.
போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முன்னிலையில் நடந்த கலந்தாய்வில் போலீசார் கலந்து கொண்டு அவர்கள் விரும்பிய 3 போலீஸ் நிலையங்களின் பெயரை குறிப்பிட்டு மனு அளித்தனர்.
அதன்பேரில் அவர்களிடம் கலந்தாய்வு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட போலீசாருக்கு உடனடியாக பணியிட மாறுதல் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று கலந்தாய்வின்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 88 உள்பட ஏட்டுகள், 2-ம் நிலை காவலர்கள், முதல்நிலை காவலர்கள் என்று 238 பேர் பணியிட மாற்றம் செய்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார்.
பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் பொறுப்பேற்று கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.