விற்பனைக்காக வைத்திருந்த 24 கிலோ கஞ்சா பறிமுதல்;4 பேர் கைது
கீழ்மதுரை ரெயில் நிலையம் அருகே 24 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.
கீழ்மதுரை ரெயில் நிலையம் அருகே 24 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை
மதுரையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் நகரில் கஞ்சா விற்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தெப்பக்குளம் போலீசார் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது காமராஜர்புரம் கீழ் மதுரை ரெயில்வே நிலைய பகுதியில் கஞ்சா விற்பதாக அவர்களுக்கு தகவல் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த பகுதியை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்வது உறுதியானது. அதை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று கஞ்சா விற்ற 4 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
கைது
அதில் திடீர் நகர் அலாவுதீன் தோப்பு சசீர் (வயது 23), வாடிப்பட்டி வினோபா நகர் சொக்கலிங்கபுரம் திலீப் குமார் (22), சிவகங்கை மாவட்டம் மானாமதுரை குருமூர்த்தி (20), உசிலம்பட்டி வடக்கு தெரு நரியம்பட்டி சரத்குமார் (22) என்பதும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விற்பனைக்காக வைத்திருந்த 24 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.