புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் 24 பேர் விடுதலை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 24 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீண்டும் எல்லை தாண்டி மீன் பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
24 மீனவர்கள் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த 28-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 24 மீனவர்களை கைது செய்து, அவர்களது 5 விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இலங்கையில் உள்ள சிறையில் அடைத்தனர்.
விடுதலை
இந்நிலையில் இந்த வழக்கு இலங்கையில் உள்ள ஊர் காவல் துறை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 24 மீனவர்களையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து இனிமேல் இந்த 24 பேரும், 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் எல்லை தாண்டி மீன் பிடித்தால் 1½ வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்து நீதிபதி விடுதலை செய்துள்ளார். மேலும் அவர்களது 5 படகுகளும் அரசுடைமையாக்கப்பட்டது என்றும் கூறினார். விடுதலை செய்யப்பட்ட 24 மீனவர்களும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.