24 ஆயிரத்து 564 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்


24 ஆயிரத்து 564 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்
x

மாவட்டம் முழுவதும் 119 மையங்களில் 24 ஆயிரத்து 564 மாணவ-மாணவிகள் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர். 1,208 பேர் தேர்வு எழுத வரவில்லை.

திண்டுக்கல்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 20-ந்தேதி வரை நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல், பழனி ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. பழனி கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 701 மாணவர்கள், 4 ஆயிரத்து 658 மாணவிகள் என 9 ஆயிரத்து 359 பேர் இருக்கின்றனர்.

இதேபோல் திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 443 மாணவர்கள், 8 ஆயிரத்து 970 மாணவிகள் என 16 ஆயிரத்து 413 பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தேர்வு எழுத அழைப்பு விடுப்பட்டிருந்தது. மேலும் இவர்கள் தேர்வு எழுதுவதற்காக பழனி கல்வி மாவட்டத்தில் 51 மையங்கள், திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 68 மையங்கள் என மொத்தம் 119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

24 ஆயிரத்து 564 பேர் எழுதினர்

இந்த தேர்வு மையங்களில் நேற்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. முன்னதாக தேர்வு மையங்களுக்கு காலை 8.30 மணியில் இருந்தே மாணவ-மாணவிகள் வரத்தொடங்கினர். பின்னர் தேர்வு மைய வளாகங்களில் அமர்ந்து தேர்வு அறைக்குள் அனுமதிக்கும் வரை படித்துக்கொண்டிருந்தனர்.

சில பள்ளிகளில் தேர்வு தொடங்குவதற்கு முன்பு மாணவ-மாணவிகள் பிரார்த்தனை செய்தனர். சிலர் அவசர, அவசரமாக ஆசிரியர்களை சந்தித்து பாடங்களில் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர்.

கலெக்டர் ஆய்வு

தேர்வு அறைக்குள் மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டு, சரியாக 10 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்வை 11 ஆயிரத்து 525 மாணவர்கள், 13 ஆயிரத்து 039 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 564 பேர் எழுதினர்.

பழனி கல்வி மாவட்டத்தில் 536 மாணவ-மாணவிகள், திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 672 மாணவ-மாணவிகள் என மொத்தம் 1,208 பேர் தேர்வு எழுத வரவில்லை. திண்டுக்கல்லில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் கலெக்டர் விசாகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் தேர்வு மையங்களில் ஆள் மாறாட்டம், காப்பியடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தவிர்க்க முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள தேர்வு மைய கண்காணிப்பு பணிக்காக 1,281 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story