குடியிருப்புகளை ஒட்டி 25 கேமராக்கள் பொருத்தம்
கட்டபெட்டு வனச்சரக பகுதியில் வனவிலங்குகளை கண்காணிக்க குடியிருப்புகளை ஒட்டி 25 கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
கோத்தகிரி
கட்டபெட்டு வனச்சரக பகுதியில் வனவிலங்குகளை கண்காணிக்க குடியிருப்புகளை ஒட்டி 25 கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
வனவிலங்குகள் நடமாட்டம்
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார வனப்பகுதிகளில் கரடி, சிறுத்தை, புலி, காட்டெருமை, காட்டுப்பன்றி, யானை, மான், முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வருகின்றன. இவ்வாறு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகளால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு, சில நேரங்களில் உயிரிழப்பு நிகழ்கிறது. இதை தடுக்க வனத்துறையில் போதுமான பணியாளர்கள் இல்லாததால் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
25 கேமராக்கள்
இந்தநிலையில் கட்டப்பெட்டு வனசரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் தன்னார்வ தொண்டு அமைப்பின் உதவியுடன் கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கட்டப்பெட்டு வனசரகர் செல்வ குமார் தலைமையில் வனத்துறையினர் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நேற்று 25 கேமராக்களை பொருத்தினர். வனத்துறையில் போதுமான பணியாளர்கள் இல்லாவிட்டாலும், வனவிலங்குகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க கேமராக்கள் உதவும். மேலும் அதன் பதிவுகளை கொண்டு அதிகமாக குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் வனவிலங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.