காளை விடும் விழாவில் 25 மாடுகள் காயம்


காளை விடும் விழாவில் 25 மாடுகள் காயம்
x

அணைக்கட்டில் நடந்த காளை விடும் விழாவில் 25 மாடுகள் கீழே விழுந்து காயமடைந்தன.

வேலூர்

காளைவிடும் விழா

அணைக்கட்டு செல்வ விநாயகர் கோவில் தெருவில் பொங்கல் பண்டிகையையொட்டி காளை விடும் விழா நேற்று நடந்தது. துணை கலெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர், குடியாத்தம், பலமநேர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 147 காளைகள் பங்கேற்றன. விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் தடுப்பு அமைத்து, சாலை நடுவே மண் கொட்டப்பட்டு இருந்தது.

காளைகளை கால்நடை மருத்துவர் மோகன்குமார் பரிசோதனை செய்து அனுமதி வழங்கினார். காலை 9 மணி அளவில் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டதை தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர். அப்போது மாடுகள் முட்டியதில் 16 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

25 காளைகள் காயம்

சில காளைகள் தடுப்பு கம்புளை உடைத்துக்கொண்டு பார்வையாளர்களை தூக்கி வீசிவிட்டு இலக்கை நோக்கி ஓடின. அப்போது இலக்கை அடைந்த பிறகு தார்சாலையில் ஓடிய போது 25-க்கும் மேற்பட்ட காளைகள் கீழே விழுந்து காயமடைந்தன.

பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன், அணைக்கட்டு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் போட்டிகளை கண்காணித்தினர். விழா ஏற்பாடுகளை கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story