லோக் அதாலத் மூலம் ரூ.25 கோடி இழப்பீடு


லோக் அதாலத் மூலம் ரூ.25 கோடி இழப்பீடு
x

மதுரை ஐகோர்ட்டு மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சிகளின் மூலம் பயனாளிகளுக்கு ரூ.25 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

மதுரை

மதுரை ஐகோர்ட்டு மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சிகளின் மூலம் பயனாளிகளுக்கு ரூ.25 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

லோக் அதாலத்

மதுரை ஐகோர்ட்டில் லோக் அதாலத் (தேசிய மக்கள் நீதிமன்றம்) நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டின் மூத்த நீதிபதியும், ஐகோர்ட்டு சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான மகாதேவன் தலைமையில் நீதிபதிகள் ஸ்ரீமதி, ராமகிருஷ்ணன், ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்தி, உறுப்பினர்கள் சடையாண்டி, உதயன், சுப்பிரமணியன், வக்கீல்கள் கிருஷ்ணவேணி, கணபதி சுப்பிரமணியன், சுரேஷ்குமார், ஐசக்பால் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் தொழிலாளர் சேவை தொடர்பான வழக்குகள், அப்பீல் மனுக்கள், விபத்து வழக்குகள் என மொத்தம் 346 வழக்குகள் சுமூக தீர்வு காண்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. முடிவில் 25 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.4 கோடியே 50 லட்சத்து 277- ஐ இழப்பீடாக வழங்கப்பட்டது.

குறிப்பாக விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் நந்தகுமார் என்பவருக்கு ரூ.17 லட்சத்து 51 ஆயிரத்து 467-ஐ இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற உத்தரவை நீதிபதி மகாதேவன் வழங்கினார்.

இந்த லோக் அதாலத் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக கூடுதல் பதிவாளர் (பொறுப்பு) வடிவேலு இருந்தார்.

மாவட்ட கோர்ட்டு

இதேபோல மதுரை மாவட்ட கோர்ட்டில் நேற்று லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் தலைமையில் 27 அமர்வுகளில் 7,288 வழக்குகள் சுமூக தீர்வு காண்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் 6,963 வழக்குகள் முடிக்கப்பட்டன.

இதன் மூலம் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.21 கோடியே 16 லட்சத்து 37 ஆயிரத்து 863 வழங்கப்பட்டது. இதில் மாவட்ட நீதிபதிகள் ரஜினி, தமிழரசி, நாகராஜன், அனுராதா, ரோகினி மற்றும் சார்பு நீதிபதிகள் ராபின்சன் சார்ஜ், உதய வேலவன், முருகன், சண்முகவேல் ராஜ், மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் (பொறுப்பு) பசும்பொன் சண்முகையா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், மதுரை மற்றும் நீதித்துறை நடுவர்கள், உரிமையியல் நீதிபதிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story