பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.25 லட்சம் மோசடி
பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.25 லட்சம் மோசடி
திருப்பூர்
ரூ.100 கோடி மதிப்புள்ள புதையலை எடுத்து தருவதாக கூறி ரூ.25 லட்சத்தை மோசடி செய்ததாகவும், மனைவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
ரூ.100 கோடி புதையல்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி பின்புறம் காமராஜ் நகரை சேர்ந்த முருகேசன் (வயது 46) என்பவர் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் திருப்பூரில் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறேன். எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. எனக்கும், எனது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக என்னை பிரிந்து அவினாசிபாளையத்தில் தோட்டத்தில் உள்ள எனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்கள். எனக்கும் சென்னையை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவருக்கும் 15 ஆண்டு பழக்கம் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு எனக்கு சொந்தமான கட்டிடத்தை விற்பனை செய்து ரூ.60 லட்சத்தை கையில் வைத்திருந்தேன்.
எனது மனைவியை என்னுடன் சேர்த்து வைக்கக்கோரி கிருஷ்ணராஜ் அவ்வப்போது எனது பாட்டி தோட்டத்துக்கு சென்று எனது மனைவியுடனும், பாட்டியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்தநிலையில் ஒருநாள் கிருஷ்ணராஜ் என்னிடம், உனது தோட்டத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள புதையில் உள்ளது. அந்த புதையலை வெளியே எடுத்தால் தான் உனது மனைவி உன்னுடன் சேர்ந்து வாழ்வார். புதையலை எடுக்க பூஜை செய்ய வேண்டும் என்று கூறி பல்வேறு தவணையாக பணம் வாங்கினார். இதுவரை ரூ.25 லடசத்தை என்னிடம் நேரடியாக கிருஷ்ணராஜ் வாங்கினார். அதன்பிறகு பூஜையும் நடத்தவில்லை. புதையலையும் எடுக்கவில்லை. எனது மனைவியை என்னுடன் சேர்த்தும் வைக்கவில்லை.
மார்பிங் புகைப்படம்
அவரிடம் கேட்டதற்கு எனது மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வைத்து, அதை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். இதுகுறித்து கிருஷ்ணராஜின் தந்தையிடம் கூறியபோது, அவர் தனது வீட்டை விற்று பணத்தை கொடுப்பதாக என்னிடம் கூறினார். கடந்த டிசம்பர் மாதம் அவரும் இறந்து விட்டார். அதன்பிறகு கிருஷ்ணராஜை தொடர்பு கொண்டபோது செல்போன் எண் சுவிட்-ஆப் செய்யப்பட்டுள்ளது. எனது பணத்தை மீட்டுக்கொடுத்து, எனது மனைவியின் புகைப்படத்தை வைத்து மிரட்டிய கிருஷ்ணராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.