ரூ.25 லட்சம் வெள்ளி நகைகள் திருட்டு
வாணியம்பாடியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 35 கிலோ வெள்ளி நகைகள் திருட்டு போனது. அவற்றை திருடியதாக கடையின் விற்பனை பிரிவு மேலாளர் கைது செய்யப்பட்டார்.
கணக்கு சரிபார்ப்பு
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பூக்கடை பஜார் பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் எல்.எஸ்.கே ரமேஷ். இவருக்கு சொந்தமான மற்றொரு நகைக்கடை சி.எல்.சாலையில் உள்ளது. அந்த கடையை அவரது மகன் விஜய்ராவ் கவனித்து வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு வாணியம்பாடி நியு டெல்லி பகுதியை சேர்ந்த ஜியாவுதீன் என்பவரின் மகன் ரியாஸ் (வயது 26) என்பவர் பூக்கடை பஜார் பகுதியில் உள்ள கடையில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
2 ஆண்டுகள் அங்கு வேலை செய்து வந்த அவர் பின்னர் சி.எல்.சாலையில் உள்ள கடைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு கடந்த 2 ஆண்டுகளாக வெள்ளி நகை விற்பனை பிரிவு மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சி.எல். சாலையில் உள்ள நகைக்கடையில் கணக்குகளை சரி பார்த்தபோது வெள்ளி நகைகள் கணக்கில் குறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.25 லட்சம் வெள்ளி நகை திருட்டு
அதைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்த போது விற்பனை பிரிவு மேலாளர் ரியாஸ் அவ்வப்போது வெள்ளி நகைகளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
தொடர்ந்து வெள்ளி நகை இருப்பு கணக்கு சரி பார்க்கப்பட்டது. அப்போது கடந்த 2 ஆண்டுகளில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 35 கிலோ வெள்ளி நகைகளை திருடிச்சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் விஜயராவ் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் ரியாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கேரியும், திருடிய நகைகளை மீட்டுத தரக்கோரியும் புகார் அளித்தார்.
மேலாளர் கைது
அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விற்பனை பிரிவு மேலாளர் ரியாசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடப்பட்ட வெள்ளி நகைகள், வெள்ளி பொருட்கள் யார் யாருக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது எனவும், எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.