25 போலீசார் மீண்டும் இடமாற்றம்
25 போலீசார் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஊட்டி,
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு 30 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் பெரும்பாலான போலீசார் ஓய்வு பெறும் வயதில் இருப்பதால், தங்களை கோவை, திருப்பூர் போன்ற சமவெளி பகுதிகளுக்குள் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், நீலகிரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் கோவை செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் இருந்து மாறுதலாகி நீலகிரி மாவட்டத்திற்கு வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டார். இந்தநிலையில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார்.
தொடர்ந்து ஊட்டியில் போலீசருக்கான குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட பணிபுரிந்த 25 போலீசார், மீண்டும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து ஐ.ஜி. சுதாகர் உத்தரவிட்டார்.
இதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மருத்துவ ரீதியாக உடல்நிலை சரியில்லாதவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.